உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

104

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


பாரசீக தேசமாகும். பழைய பாரசீக தேசத்தை யாண்டவர் பஃலவர் என்றும் அந்த நாடு பஃலவ நாடு என்றும் கூறப்பட்டது. பஃலவ தேசம் என்றது தமிழில் பல்லவதேசம் என்றாயிற்று. சீவகசிந்தாமணி கூறுகிற பல்லவ தேசம் பழையபாரசீக நாடாகிய பஃலவ தேசம் ஆகும்.

சீவகசிந்தாமணி களப்பிரர் ஆட்சிக் காலத்தில், சமண சமயம் ஓங்கி வளர்ந்திருந்த காலத்தில், கி.பி. 5அல்லது 6ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும்.

எலிவிருத்தம், கிளிவிருத்தம்

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய தேவாரப் பதிகத்தில் எலிவிருத்தம், கிளி விருத்தம் என்னும் இரண்டு நூல்களைக் கூறுகிறார். “கூட்டினார் கிளியின் விருத்தம் உரைத்ததோர் எலியின் தொழில், பாட்டு மெய்கொலிப் பக்கமே செலுத்தும்” (திருவாசகம் 5). நரிவிருத்தம் போன்று இந்த நூல்களுள் சமண சமய நூல்களே. இந்த நூல்கள் பிற்காலத்தில் மறைந்து போயின. இந்நூல் செய்யுட்களில் கலித்துறைச் செய்யுட்களும் பயின்றுள்ளன என்பது தெரிகின்றது. "குண்டலகேசி விருத்தம் கிளி விருத்தம் எலிவிருத்தம் நரிவிருத்தம் முதலாயுள்ளவற்றுள் கலித்துறைகளும் உளவாம்” என்று வீரசோழிய உரையாசிரியர் எழுதி உள்ளார்.

விளக்கத்தார் கூத்து

இது கூத்து நூல். இதைச் செய்தவர் விளக்கத்தார் (விளக்கத்தனார்) என்னும் புலவர், இந்த நூல் பிற்காலத்தில் மறைந்துவிட்டது. இந்த நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுளை யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் தம்முடைய உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் (இணைப்பு 1இல் முதல் செய்யுள் காண்க). இந்தக் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் இவர் அச்சுதன் என்னும் களப்பிர அரசனை வாழ்த்துகிறார்.

அடுதிறல் ஒருவ நிற் பரவுதும், எங்கோன்
தொடுகழற் கொடும்பூண் பகட்டெழு மார்பிற்
கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப் பேர்வேல் அச்சுதன்
ஒன்றுகடல் உலகம் முழுவதும்
ஒன்றுபு திகிரி யுருட்டுவே னெனவே