110
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
காரெட்டு
இது எட்டு வெண்பாக்களால் ஆன சிறு நூல். காருக்கும் (மழைக்கும்) சிவபெருமானுக்கும் உவமை கூறுமுகத்தான் சிவனை வாழ்த்துகிறது இந்நூல். இதுவும் நக்கீரதேவ நாயனாரால் இயற்றப்பட்டது.
போற்றிக் கலிவெண்பா
கலிவெண்பாவினால் சிவபெருமானைப் போற்றிக் கூறுகிறது இந்நூல். இதுவும் நக்கீரதேவநாயனாரால் இயற்றப்பட்டது.
திருக்கண்ணப்பதேவர் திருமறம்
நூற்று ஐம்பத்தெட்டு அடிகளைக் கொண்ட அகவற்பாவினா லானது. இந்நூல் கண்ணப்ப நாயனார் சிவபெருமானிடம் பக்தி (அன்பு) செய்து முக்திபெற்ற வரலாற்றைக் கூறுகிறது. இறுதியில் ஒரு வெண்பாவையும் உடையது. நக்கீர தேவநாயனாரால் பாடப்பட்டது.
இந்தச் செய்யுட்களைப் பாடிய நக்கீரதேவநாயனார், சங்க காலத்தில் இருந்த நக்கீரர் அல்லர். ஆனால், அவரும் இவரும் ஒருவரே என்று கூறுகின்றனர். இது தவறான கருத்து. நக்கீர தேவநாயனார் பாடிய மேற்காட்டிய செய்யுட்கள் எல்லாம் பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன. பதினோராந் திருமுறையை முதன்முதலாக அச்சிற்பதிப்பித்த திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்புராய செட்டியார் அவர்கள், “மதுரைக் கடைச்சங்கத்துத் தெய்வப் புலவர்களுளொருவ ராகிய நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த கயிலை பாதி காளத்தி பாதித் திருவந்தாதி" என்று ஏட்டுச் சுவடியில் இருந்தபடியே எழுதியுள்ளார். கடைச்சங்க காலத்தில் இருந்த சங்கப் புலவரான நக்கீரரைப் பிற்காலத்தில் (களப்பிரர் காலத்தில்) இருந்த நக்கீரதேவநாயனார் என்பவருடன் இணைத்து இருவரும் ஒருவரே என்று கூறுவது பொருந்தாது. சங்க காலத்து நக்கீரருக்குத் தேவர் என்றும் நாயனார் என்றும் சிறப்புப் பெயர்கள் இருந்ததில்லை.
கடைச்சங்க காலத்துப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை, பதினோராந்திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் “நக்கீரதேவ நாயனார் அருளிச்செய்த திருமுருகாற்றுப்படை" என்று குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சங்க காலத்து நக்கீரரையும் பிற்காலத்திலிருந்த நக்கீரதேவ நாயனாரையும் சைவ சமயத்தவர் பிற்காலத்தில் ஒருவரே என்று தவறாகக் கருதினார்கள். (திருமுருகாற்றுப்