உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்

117


தேவநாயனார்) சங்க காலத்தில் பாரிவள்ளலின் நண்பரும் அவ்வள்ளல் இறந்த பிறகு செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பதிற்றுப்பத்து 7ஆம் பத்தில் பாடியவருமான சங்க காலத்துக் கபிலர் அல்லர். இந்தக் கபிலர் களப்பிரர் காலத்தில் இருந்த கபிலர். இந்தக் கபிலரும் மூத்தநாயனார் இரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி முதலான செய்யுட்களை இயற்றிய கபிலதேவநாயனாரும் ஒருவரே.

இன்னாநாற்பது பாடிய கபிலரும் மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை,சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்ற நூல்களைப் பாடிய (பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டவை) கபிலதேவநாயனாரும் வெவ்வேறு கபிலர்கள் என்று திரு. சதாசிவபண்டாரத்தார் கருதுகிறார். இவர் மூன்று கபிலர்களைக் கூறுகிறார். சங்க காலத்தில் இருந்த கபிலர், அவருக்குப் பிறகு இன்னாநாற்பது பாடிய கபிலர், மூத்தநாயனார் இரட்டை மணிமாலை முதலான நூல்களை இயற்றிய கபிலதேவநாயனார் ஆகிய மூன்று கபிலர்கள் என்று கூறுகிறார். இதற்கு இவர் கூறும் காரணம், கபில தேவநாயனார் மூத்த பிள்ளையார் மீது இரட்டை மணிமாலை பாடியிருப்பதும் சிவபெருமான் திருவந்தாதியில் திருச்சிராப்பள்ளி மலையில் சிவபெருமான் எழுந்தருளியிருப்பதாகக் கூறியிருப்பதும் ஆகும். அதாவது, மூத்தபிள்ளையார் (கணபதி) கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நரசிம்மவர்மன் மாமல்லன் காலத்தில், சிறுத்தொண்ட நாயனார் (பரஞ்சோதியார்) வாதாபியிலிருந்து கணபதி உருவங்களைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் முதல் முதலாகக் கணபதி வணக்கத்தை உண்டாக்கினார் என்று பொதுவாகக் கூறப்படும் கருத்தை உடன்பட்டு, மூத்த பிள்ளையார் இரட்டைமணிமாலை பாடியிருப்பதனாலும் அந்தாதியில் திருச்சிராப்பள்ளிமலையில் சிவனுக்குக் கோயில் இருந்ததைக் கூறியிருப்பதனாலும், (திருச்சி மலையில் முதலாம் மகேந்திரவர்மன் ஒரு குகைக்கோவிலை அமைத்தான் என்பது கொண்டும்) சதாசிவ பண்டாரத்தார் கபிலதேவநாயனார் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கருதுகிறார் (பண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு கி.பி. 250-600,1965).

மாமல்லன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் சேனாதிபதியான பரஞ்சோதியார் (சிறுத்தொண்டநாயனார்) இரண்டாம் புலிகேசியின் நகரமான வாதாபியை வென்று அங்கிருந்து கணபதி உருவங்களைக் (வாதாபி கணபதி) கொண்டுவந்து கணபதீச்சரம் என்னும் ஊரில்