உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்

119


பெற்றது. இதை நாள்தோறும் காலையில் சிறு அளவாக உட்கொண்டால் உடல் நோயை நீக்கி நலம் உண்டாக்கும். திரிகடுகமாகிய சுக்கு, மிளகு, திப்பிலியைச் சமனளவாகச் சிதைந்து நீர்விட்டுக் காய்ச்சிய கியாழத்தையும் உட்கொள்ளலாம். திருகடுகக் கியாழமும் சூரணமும் உடல் நோயைப் போக்குவதுபோல, திரிகடுகம் என்னும் இந்நூலைப் படிப்பவரின் உள்ள நோய் (மனநோய்) நீங்கும் என்னும் கருத்தினால் இந்நூல் திரிகடுகம் என்று பெயர் பெற்றது. ஒவ்வொரு செய்யுளிலும் மும்மூன்று கருத்துகள் கூறப்படுகின்றன. இதன் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இது:

கண்ணகன் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருத்தம் சாய்த்ததூஉம்- நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்
பூவைப் பூவண்ணன் அடி

ஆசாரக் கோவை

இந்நூல் நூறு செய்யுட்களையும் ஒரு சிறப்புப் பாயிரத்தையும் உடையது. இந்நூல் வெண்பாவின் வகைகளான குறள்வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசைவெண்பா, பஃறொடை வெண்பா ஆகிய வெண்பாக்களால் அமைந்த நூல். மனிதர் ஒழுக வேண்டிய ஒழுக்கங்களைத் தொகுத்து இதில் இதன் ஆசிரியர் கூறுகிறார். இதன் ஆசிரியர் பெருவாயில் முள்ளி என்பவர். கயத்தூர்ப் பெருவாயில் முள்ளி என்று கூறப்படுவதால், இவர் கயத்தூரைச் சேர்ந்த பெருவாயில் என்னும் ஊரில் இருந்தவர் என்று கருதலாம். புதுக்கோட்டையில் அன்னவாயில், சித்தன்னவாயில், பெருவாயில் என்னும் ஊர்கள் உள்ளன. ஆகவே, இவர் சிறப்புப்பாயிரம் இது:

ஆரெயில் மூன்றும் அழித்தான் அடியேத்தி
ஆரிடத்துத் தானறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறனாய மற்றவற்றை
ஆசாரக் கோவைஎனத் தொகுத்தான்; தீராத்
திருவாயிலாய திறல்வண் சயத்தூர்ப்
பெருவாயில் முள்ளி என்பான்

பழமொழி நானூறு

முன்றுறையரையர் என்பவர் இந்நூலின் ஆசிரியர். இந்நூல் கடவுள் வாழ்த்து உட்பட நானூறு வெண்பாக்களை யுடையது.