பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
123
நூலின் புறத்தேயுள்ளமையும் அதற்குப் பழைய உரை காணப்படாமையும் இவ்வுண்மையை நன்கு வலியுறுத்துதல் அறியற்பாலதாம்" (சதாசிவப் பண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு கி.பி. 250-600, பக்கம் 65).
விநாயகர் வழிபாடு தமிழகத்தில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் அவ்வரசனுடைய சேனாதிபதியான பரஞ்சோதியார் (சிறுத்தொண்டநாயனார்) காலத்தில் முதன் முதலாக உண்டாயிற்று என்னும் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு பண்டாரத்தார் அவர்கள் இவ்வாறு கூறுகிறார். விநாயகர் வணக்கம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் உண்டாயிற்று என்னும் கருத்து அண்மைக் காலத்தில் இருந்தது. ஆனால், கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்பே களப்பிரர் ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டிருந்தது என்பது இப்போது ஆராய்ச்சியினால் தெரிகிறபடியால் இக்கடவுள் வாழ்த்து இந்நூலுக்கு உரியதே எனக் கொள்ளலாம் (இது பற்றி இன்னா நாற்பது என்னும் தலைப்பில் விளக்கிக் கூறியிருப்பது காண்க). பண்டாரத்தார் அவர்களே இந்நூலாசிரியராகிய மூலாதியார் "கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவர் ஆவார்" என்று கூறுகிறபடியால், இந்நூல் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டது என்பது தெளிவாகிறது.
திணைமாலை நூற்றைம்பது
இதுவும் அகப்பொருள் ஐந்திணைகளைக் கூறுகிற நூல். குறிஞ்சிக்கு 31 செய்யுளும் நெய்தலுக்கு 31 செய்யுளும் பாலைக்கு 30 செய்யுளும் முல்லைக்கு 31 செய்யுளும் மருதத்துக்கு 30 செய்யுளும் ஆக 153 செய்யுட்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், நூலின் பெயரிலிருந்து 150 செய்யுட்கள்தாம் இதற்குரியவை என்று தோன்றுகிறது. எஞ்சியுள்ள மூன்று செய்யுட்கள் பிற்காலத்து இடைச் செருகலாக இருக்குமோ, அல்லது, நூலாசிரியரே இச்செய்யுட்களையும் இயற்றியிருக்கலாமோ என்று ஐயம் ஏற்படுகிறது.
இந்நூலாசிரியரின் பெயர் கணிமேதாவியார். இவரே ஏலாதி என்னும் நூலின் ஆசிரியர் என்பதை முன்பு அறிந்தோம். இந்நூலின் பாயிரம் இது:
முனிந்தார் முனிவொழியச் செய்யுட்கண் முத்துக் கனிந்தார் களவியற் கொள்கைக் - கணிந்தார் இணைமாலை யீடிலா வின்றமிழால் யாத்த திணைமாலை கைவரத் தேர்ந்து