பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
143
ஓரையும் ஹோராவும் ஒன்றா? ஒலி வடிவில் ஒன்றுபோலத் தோன்றுகிற இரண்டு சொற்களும் ஒன்றுதானா? கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த தொல்காப்பியர், கி.பி. 5ஆம் நூற்றாண்டில் சமஸ் கிருதத்தில் வழங்கிய ஹோராவை எப்படி எடுத்திருக்க முடியும்? ஹோராதான் ஓரை ஆயிற்றா? ஓரை என்பது வேறு; ஹோரா என்பது வேறு அல்லவா? குதிரைக்குக் குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் என்று கூறினானாமே ஒரு மேதை, அது போன்றல்லவா இருக்கிறது இது!
ஓரை என்னும் தமிழ்ச் சொல் வேறு, ஹோரா என்னும் கிரேக்க- சமஸ்கிருதச் சொல் வேறு. ஒலி வடிவில் இரண்டும் ஒரே சொல்லைப் போலக் காணபட்டாலும் இரண்டுக்கும் பொருள் வெவ்வேறு. ஹோரா என்னும் கிரேக்கச் சொல்லுக்கு இராசி அல்லது முகுத்தம் என்று வான நூலில் பொருள் கூறப்படுகிறது. ஓரை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு மகளிர் கூட்டம் (ஆயம்) என்பது பொருள். பழைய சொற்கள் சிலவற்றின் பொருள் மறைந்து போய்விட்டதுபோல ஓரையின் பொருளும் பிற்காலத்தில் மறைந்து போயிற்று. மிகப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் இச்சொல்லின் பழைய பொருளை (கருத்தை) அறியாமல், இதை ஹோராவின் திரிபு என்று கருதித் தவறான உரையை எழுதிவிட்டனர்.
மறைத்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோர்க் கில்லை (தொல்.பொருள் 135)
என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் வருகிற ஓரை என்பதற்குப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் எழுதிய பிழையான உரைகளைக் காண்க. உரையாசிரியர்கள் காட்டிய தவறான வழியில் சென்ற சிவராசரும் வையாபுரியாரும் இவ்வாறு தவறான கருத்துக் கொண்டதில் வியப்பொன்றும் இல்லை. இதற்குப் பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் எழுதியுள்ள நேரான உரை காண்க (சோமசுந்தர பாரதியார், ‘தொல்காப்பிய ஆராய்ச்சி', அண்ணாமலைப் பல்கலைக்கழக இதழ், ஆறாம் தொகுதி, பக். 142-143. இதே கருத்தை அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரையிலும் காணலாம்: (Journal of the Annamalai Univer-sity, Vol. VI, p. 138). ஓரை என்னும் சொல்லுக்குப் பேராசிரியர் பாரதியார் அவர்கள் கூறும் விளக்கம் வருமாறு: