146
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
ஓரையைக் கூறுகிற தொல்காப்பியர் மிகமிகப் பழங்காலத்தில் இருந்தவர் என்பது இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது.
வையாபுரியார், தொல்காப்பியரைப் பிற்காலத்து வச்சிரநந்தி சங்கத்தில் இருந்தவர் என்று அறியாமல் கூறியது போலவே வேறுசில சங்கப் புலவர்களையும் பிற்காலத்து வச்சிரநந்தி சங்கத்தில் இருந்தவர்கள் என்று போலிக் காரணங் காட்டிக் கூறுகிறார். ஆழ்ந்து பாராமல் மேற் போக்காகக் கூறுகிற இவருடைய கருத்து இதிலும் போலி வாதமாகக் காணப்படுகிறது. கடைச்சங்க காலத்துப் புலவர்களான உலோச்சனார், மாதீர்த்தனார் முதலானவர்களைப் பிற்காலத்து வச்சிர நந்தியின் திராவிடச் சங்கத்தோடு இவர் இணைக்கிறார். "தமிழ் மொழி தமிழ் இலக்கிய வராலற்றிலே முதல் தரமான முக்கிய நிகழ்ச்சி யொன்று கி.பி. 470 இல் நிகழ்ந்தது. அதுதான் மதுரையிலே வச்சிரநந்தியின் மேற்பார்வையில் நிறுவப்பட்ட தமிழ்ச் சங்கம். பழைய புலவர்களிலே உலோச்சனார். மாதீர்த்தனார் முதலான ஜைனப் புலவர்களைப் பார்க்கிறோம். புறநானூறு 175ஆம் பாடலிலும் அகநானூறு 59ஆம் பாடலிலும் மறுபிறப்பும் புராணக்கதையும் கூறப்படுகின்றன. அகம் 193இல் மதக்கொள்கையைப் பற்றின குறிப்பைக் காண்கிறோம். ஆனால், தமிழ் மொழி தமிழ் இலக்கியங்களை ஆராயும் பழைய ஜைன நிறுவனத்தைப்பற்றி இதற்கு முன்பு கேள்விப்படவில்லை” (S. Vaiyapuri Pillai, History of Tamil language and Literature, pp. 58-59). (வச்சிரநந்தியின் ஜைன நிறுவனத்தைத்தான் முதல் முதலாகக் கேள்விப்படுகிறோம்.) இவருடைய இந்தக் கூற்றையும் அலசி ஆராய்வோம்.
உலோச்சனாரும் மாதீர்த்தனாரும் சைன சமயப் புலவராகையால் அவர்கள் வச்சிரநந்தியின் சைன சங்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது இவர் கூறும் காரணமாகும். உலோச்சனாரும் மாதீர்த்தனாரும் சைனரா அல்லரா என்னும் ஆராய்ச்சியில் நுழையவேண்டியதில்லை. அவர்கள் சைன சமயத்தவர் என்றே வைத்துக்கொள்வோம். அவர்கள் சைனர் என்ற காரணத்தினாலே அவர்கள் வச்சிரநந்தியின் சைனத் திராவிட சங்கத்தில்தான் இருந்தார்கள் என்று கூறுவது உண்மை இல்லாத போலிக் காரணமாகும். பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தில் சைன, பௌத்த மதத்தவர் உட்பட எல்லாச் சமயத்துப் புலவர்களும் தமிழ் ஆராய்ந்தார்கள். வச்சிரநந்தியின் தமிழ்ச் சங்க காலத்திலேதான் சைன