உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

150

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


செஞ்செவி எருவை குறும்பொறை எழுந்த நெடுந்தாள் மராஅத்து அருட்கவட் டுயர்சினை பிள்ளை யூட்ட விரைந்துவாய் வழுக்கிய கொழுங்கண் ஊன்றடி கொல்பசி முதுநரி வல்சி யாகும் (அகம் 193: 6-10)

இது எப்படிச் சைனருக்கு மட்டும் சிறப்பானது? எல்லாச் சமயத்தாருக்கும் இந்த நிகழ்ச்சி பொதுவன்றோ? இந்தச் செய்யுட்களைப் பாடிய மருதனிளநாகனார் சைனரல்லர், அவர் சைவ சமயத்தவர். அன்றியும் கடைச்சங்கப் புலவர். இவரைச் சைனர் என்றும் வச்சிரநந்தி அமைத்த பிற்காலத்துச் சைன சமயச் சங்கத்தைச் சேர்ந்தவர் என்றும் வையாபுரியார் எழுதுகிறார். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வச்சிரநந்தியின் சைனத் தமிழச் சங்கத்தில் இவர் இருந்தார் என்று, ஆராயாமல் வையாபுரியார் கூறுகிறார். ஆனால், மருதனிள நாகனார், வச்சிரநந்தி சங்கம் ஏற்படுவதற்குப் பல நூற்றாண்டுக்கு முன்பு கடைச்சங்க காலத்தில் இருந்தவர் என்பதை அவர் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும் (புறம் 52), பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் (புறம் 55) நாஞ்சில் வள்ளுவனையும் (புறம் 138, 139) பாடிய செய்யுட்கள் வெள்ளிடைமலை போலவும் உள்ளங்கை நெல்லிக் கனி போலவும் தெரிவிக்கின்றன. ஆனால்? இவற்றையெல்லாம் பாராமல் வையாபுரியார், கடைச்சங்க காலத்தில் இருந்த புலவர்களை இழுத்துக்கொண்டுவந்து, பல நூற்றாண்டுகளுக்குப் பின் இருந்த வச்சிரநந்திச் சங்கத்தில் விடுகிறார்.

வையாபுரிப்பிள்ளை தாம் எழுதிய தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் கூறுகிற இவை போன்ற வேறு பல போலிச் செய்திகளை இங்கு ஆராயாமல் இதனோடு நிறுத்துகிறோம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.