உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

166

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


பாண்டியன் கி. பி. 770இல் வாழ்ந்திருந்த ஜடிலவர்மன் பராந்தகனுடைய தந்தை என்பதை அறிகிறோம். ஆகையினாலே களவியல் உரையை ஏட்டில் எழுதிய ஆசிரியர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வராதல் வேண்டும். இவர் காலத்திலிருந்து பத்துத் தலை முறைகளைக் கணக்கிடுவோமானால், முதல்முதல் உரை கூறிய நக்கீரர் காலம் கி. பி. 5ஆம் நூற்றாண்டு என்றாகிறது. கி. பி. 770இல் இருந்து 10 * 30ஐக் கழிக்க வேண்டும். ஆகவே, இந்த நூற்றாண்டே சங்கம் (கடைச்சங்கம்) இருந்த காலமாகும்.

இவர் ஆராய்ந்து கண்ட முடிவு சரியே. இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தின்படி ஆராய்ந்து, களவியலுக்கு உரை கண்ட நக்கீரர் கி. பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கூறியது முற்றிலும் சரியே. இதையே நாமும் கூறியுள்ளோம். நக்கீரர் அடிநூல், நக்கீரர் நாலடி நானூறு, கயிலைபாதி காளத்திபாதித் திருவந்தாதி, திரு ஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழுக்கூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, கண்ணப்ப தேவர் திருமறம் ஆகிய நூல்களைப் பாடிய (இந்நூல்கள் சைவ சமயத் திருமுறைகளில் ஒன்றான பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன) நக்கீர தேவ நாயனார் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்தவர் என்று கூறினோம். ஆனால், இந்த நக்கீரர் கடைச்சங்க காலத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனையும் நெடுநல்வாடை முதலான சங்கச் செய்யுட் களையும் பாடிய சங்க காலத்து நக்கீரர்களும் ஒருவரே என்று தெரிகின்றனர். இது வரலாற்றுக்குப் பெரிதும் மாறுபாடாக இருக்கிறது. ஆகவே, இறையனார் அகப்பொருள் உரை இரண்டு வேறு நக்கீரர்களை ஒருவரே என்று இணைத்துக் கூறுவது தவறு என்பது நன்றாகத் தெரிகிறது. சங்க காலத்தில் திருமுருகாற்றுப் படை பாடிய நக்கீரரை நக்கீரதேவநாயனாருடன் பிணைத்துக் கூறினால் இறையனார் அகப்பொருள் உரைக்குப் பெருமதிப்பு ஏற்படும் என்னும் காரணம்பற்றி இரு நக்கீரர்களையும் ஒருவராகப் பிணைத்துக் கூறினார்கள் போலும். ஆனால் இரண்டு நக்கீரர்களும் வெவ்வேறு காலத்தில் இருந்தவர்கள் என்பதும் இருவரும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பும் பின்பும் இருந்த வெவ்வேறு நக்கீரர்கள் என்பதும் தெரிகின்றன.