முகவுரை
துளு நாடு என்றும் கொங்கண நாடு என்றும் தமிழ்ச்சங்க காலத்துத் தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகிற நாடு அக்காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இணைந்திருந்தது. இன்றைய கேரள நாடாகிய பழைய சேரநாட்டுக்கு வடக்கே தென் கன்னட மாவட்டம் என்னும் பெயருடன் இருப்பதுதான் பழைய துளு நாடு. தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த பழைய சேர நாடு பிற்காலத்திலே மலையாள நாடாக மாறித் தனியாகப் பிரிந்து போய்விட்டது போலவே பழைய தமிழகத்துடன் இணைந்திருந்த துளு நாடும் பிற்காலத்திலே பிரிந்து தனியாகப் போய்விட்டது. ஆனால், பழைய சங்கத் தமிழ் இலக்கியங்கள் துளு நாடு தமிழகத்துடன் கொண்டிருந்த உறவை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
அகநானூறு, புறநானூறு, நற்றிணைநானூறு குறுந்தொகை நானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் முதலிய நூல்களிலே சில செய்யுட்களில் துளு நாட்டைப் பற்றிய செய்திகள் தற்செயலாகக் கூறப் பட்டுள்ளன. அச்செய்திகள் தற்செயலாகப் புலவர்களால் கூறப்பட்டவை. ஆகவே, அக்காலத்துத் துளு நாட்டின் முழு வரலாறு அச் செய்யுள்களில் கிடைக்கவில்லை. கிடைத்துள்ளவை வரலாற்றுத் துணுக்குகளேயாகும்.
சங்கச் செய்யுள்களிலே ஆங்காங்கே சிதறிக் கிடக்கிற அவ்வரலாற்றுத் துணுக்குகளையெல்லாம் ஒன்றாகத் திரட்டித் தொகுத்து முறையாக வகைப்படுத்தி எழுதப்பட்டதுதான் துளு நாட்டு வரலாறு என்னும் இச்சிறுநூல். இந்நூலுக்கு இது தவறான பெயர். சரியாகப் பெயர் கூறவேண்டுமானால் சங்க காலத்துத் துளு நாடு அல்லது கி. பி. 2ஆம் நூற்றாண்டுத் துளு நாடு என்று இதற்குப் பெயர் சூட்டப்படவேண்டும். ஏறத்தாழ கி. பி. 100 முதல் 150 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த துளு நாட்டின் செய்தி இந்நூலில் கூறப்படுகின்றது. அக்காலத்துக்கு முற்பட்ட துளு நாட்டு வரலாறு கிடைக்கவில்லை.
அக்காலத்தில் துளு நாட்டை யரசாண்ட அரசர்கள் கொங்காணங்கிழார் என்றும் நன்னன் என்றும் பெயர் பெற்றிருந்தார்கள். அவர்கள், அக்காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் இருந்தே