பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு
179
உள்ள அகலம் குறைந்த நீளமான பிரதேசம் என்பது தெரிகிறது (படம் 1 காண்க).
இனி, சங்க இலக்கியங்களிலே கூறப்படுகிற துளு நாட்டு ஊர்கள் மலைகள் முதலியவற்றை ஆராய்வோம்.
துளு நாடு (கொண்கானம்)
'தோகைக் காவின் துளு நாடு'(அகம் 15:5) என்று மாமூலனார் என்னும் புலவர் துளு நாட்டின் பெயரைக் கூறுகிறார். துளு நாட்டுக் காடுகளில் தோகைகள்(மயில்கள்) இருந்தன என்று கூறுகிறார்.
துளு நாட்டை நன்னன் என்னும் பெயருள்ள வேள்குல அரசர் ஆண்டனர். அவர்கள் 'கொண்கானம் கிழான்' என்றும் பெயர் பெற்றிருந்தனர். அதாவது, கொண்கான நாட்டுக்குத் தலைவன் என்பது பொருள். பாலைபாடிய பெருங்கடுங்கோ என்னும் சேர அரசர் தாம் பாடிய நற்றிணை 391 ஆம் செய்யுளில், 'பொன்படு கொண்கான நன்னன்' என்று கூறுகிறார். மோசிகீரனார் என்னும் புலவர் 'கொண் கானம் கிழான்' ஒருவனைப் பாடுகிறார். அதில் கொண்கான நாட்டின் மலைகளில் பல அருவிகள் பாய்வது தூய வெண்ணிற ஆடைகளை வெயிலில் உலர்த்துவது போல இருந்தன என்று கூறுகிறார்.
அறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத் தண்பல இழிதரும் அருவிநின் கொண்பெருங் கானம் பாடல் எனக்கு எளிதே
(புறம்.154:10-13)
என்று அவர் பாடுகிறார். கொண்கானத்து (துளு நாட்டுக்குக் கிழக்கேயுள்ள உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இன்றும் பல அருவிகள் தோன்றிப் பாய்வதைக் காண்கிறோம். இப்புலவரே ‘கொண் பெருங் கானத்துக்' கிழானைப் புறம் 155 ஆம் பாட்டில் பாடியுள்ளார். கொண்கானங் கிழான் தன்னை நாடி வரும் இரவலருக்குப் பொருள் கொடுத்தான் என்றும் அவன் பிற வேந்தரை வென்று அவர்களிடம் திறை வாங்கினான் என்றும் புறம் 156 ஆம் செய்யுளில் இப்புலவர் கூறுகிறார். இச்செய்யுள்களில் இவர் கொங்கண நாட்டைக் கொண் பெருங்கானம் என்று கூறுவது காண்க. கொங்கணம், கொண்கானம், கொண்பெருங்கானம் என்பன எல்லாம் ஒன்றே.