பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு
181
நன்னனுடைய கொங்கணக் காட்டில் (கழை) மூங்கில் அதிகமாக விளைந்தன என்று கூறுகிறார். கொங்கணத்தைக் ‘கானம்’ என்று சுருக்கமாகக் கூறுகிறார்.
விழைதக ஓங்கிய கழைதுஞ்சு மருங்கில் கானமர் நன்னன் (அகம் 392: 26-27)
என்று அவர் கூறுவது காண்க (கான் - கானம், கொங்கானம்).
செல்லூர்
மருதன் இளநாகன் என்னும் புலவர் இவ்வூரைக் கூறுகிறார். மழுவாள் நெடியோனாகிய பரசுராமன் இவ்வூரில் யாகம் செய்த கதையை இவர் கூறுகிறார் (இணைப்பு 2 காண்க)
கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க் கடாஅ யானைக் குழூஉச்சமந் ததைய மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன் முன்முயன்று அரிதினின் முடித்த வேள்விக் கயிறரை யாத்த காண்டகு வனப்பின் அருங்கடி நெடுந்தூண் (அகம் 220:3-8)
என்பது அப்பாட்டில் இச்செய்தியைக் கூறும் பகுதி.
இந்தச் செல்லூர் கடற்கரைக்கு அருகில் இருந்தது என்றும் அவ்வூருக்குக் கிழக்கில் கோசருடைய நியமம் (ஊர்) இருந்தது என்றும் இப்புலவரே இன்னொரு செய்யுளில் கூறுகிறார்.
அருந்திறற் கடவுள் செல்லூர்க் குணாஅது பெருங்கடல் முழக்கிற் றாகி யாணர் இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கருங்கட் கோசர் நியமம் (அகம்90 : 9 -12)
என்று இவர் கூறுகிறார்.
எனவே, துளுநாட்டுச் செல்லூரில் பரசுராமன் செய்த வேள்விக்கு நினைவாக ஒரு தூண் அமைக்கப்பட்டிருந்த தென்றும், அச்செல்லூர் கடற்கரைக்கு அருகில் இருத்ததென்றும் தெரிகின்றன.
ஐயூர் முடவனார் என்னும் சங்க காலத்துப் புலவரும் தம்முடைய செய்யுளில் இச்செல்லூரைக் கூறுகிறார். ஆனால், பரசுராமன்