184
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
நறவு
இது துளு நாட்டில் கடற்கரையிலிருந்த துறைமுகப் பட்டினம். கள்ளுக்கு (மதுவுக்கு) நறவு என்றும் ஒரு பெயர் உண்டு. ஆகவே, நறவு என்னும் பெயருடைய இந்த ஊரைத் ‘துவ்வா நறவு’ (உண்ணப்படாத நறவு) என்று தமிழ்ப் புலவர்கள் கூறினார்கள். துளு நாட்டை சேர அரசர் வென்ற பிறகு இத்துறைமுகப்பட்டினத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (இவன் செங்குட்டுவனுக்கும் நார்முடிச் சேரலுக்கும் தம்பி) தங்கியிருந்தான் (பதிற்றுப். 6ஆம் பத்து 10: 9- 12). கிரேக்கரோம வாணிகர்கள் நறவை ‘நவ்றா’ என்று கூறினார்கள். துளு மொழியில் இது நாறாவி என்று கூறப்பட்டது. இங்கு யவனக் கப்பல்கள் வந்து வாணிகஞ் செய்ததாகத் தெரிகின்றது.
சேரநாட்டுத் தொண்டித் துறைமுகந்தான் நறவு என்று சிலர் கருதுகின்றனர். துளு நாட்டிலுள்ள மங்களூர்தான் நறவு என்று வேறு சிலர் கருதுகிறார்கள். நறவு துளு நாட்டிலிருந்த கடற்கரைப் பட்டினம் ஆகும்.
ஏழில்மலை
இது துளு நாட்டில் இருந்த மலைகளில் ஒன்று. இது துளு நாட்டின் தெற்கே இருந்தது. ஏழில் நெடுவரை என்றும், ஏழிற்குன்று என்றும் இதனைக் கூறுவர். ஏழில்மலையின் ஒரு பிரிவு பாழிமலை (பாழிச்சிலம்பு) என்று பெயர் பெற்றிருந்ததையும் அங்குப் பாழி என்னும் ஊர் இருந்ததையும் முன்னமே கூறினோம்.
பாரத்துத் தலைவன் ஆர நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பு (அகம் 152: 12-13)
என்றும்
பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு ஏழிற் குன்றம் (நற்.391:6-7)
என்றும்
நன்னன் நன்னாட்டு ஏழிற் குன்றம் (அகம் 349; 8-9)
என்றும்