உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

202

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3



கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன் களிறொடு பட்ட ஞான்றை ஒளிறுவான் கொங்கர் ஆர்ப்பு (குறுந். 393; 3-6)

என்று அச்செய்யுள் கூறுவது காண்க.

பசும்பூண் பாண்டியனுடைய துளு நாட்டுப் போர் தோல்வியாக முடிந்தது. துளு நாட்டரசன் நன்னன் இரண்டாமவன் வெற்றி பெற்றான். அதன்பிறகு பசும்பூண் பாண்டியனுடைய செய்தி ஒன்றும் தெரியவில்லை.

பாண்டியன் போர் முடிந்த பிறகு துளு நாட்டின் மேல் சேரன் போர்தொடுத்தான். சேரன் செங்குட்டுவனுடைய தமயனான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், தனக்கு அடங்காமலும் தனக்கு எதிராகப் போர் செய்துகொண்டுமிருந்த நன்னனை அடக்குவதற்காகத் துளு நாட்டின் மேல் போர் தொடுத்தான்.

சேரன் போர்

நன்னன் இரண்டாமவன் தன் மேல் படையெடுத்துவந்த சேரனுடன் போர் செய்யவேண்டியவனானான். இந்தப் போர் மிகக் கடுமையாக இருந்தது. சேரன் நன்னனை அடியோடு அழிக்க வேண்டும் என்னும் உறுதியுடன் படையெடுத்துப் போய்ப் போர் செய்தான். சேரன் நன்னனை அழிக்கவேண்டிய காரணங்கள் மூன்று இருந்தன.

முதலாவது, நன்ன அரசர், சேர நாட்டுக்கு வரும் யவன வாணிகக் கப்பல்களைச் சேர நாட்டுக்கு வராதபடி தடுத்துக் குறும்பு செய்து கொண்டிருந்தார்கள். இந்தக் குறும்பை நார் முடிச்சேரலின் தந்தையராகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (முதலாம் நன்னன் காலத்தில்) வென்றான் என்பதை மேலே கூறினோம்.

இரண்டாவது காரணம், நன்னன் இரண்டாமவன் சேர நாட்டுக்குரிய பூழி நாட்டைப் பிடித்துக் கொண்டான். இது களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலின் காலத்தில் நடந்தது. ஆகவே, இழந்த பூழி நாட்டை மீட்டுக்கொள்ள வேண்டியது சேரனுடைய கடமையாக இருந்தது.

மூன்றாவது காரணம், நன்னன் வடகொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டைக் கைப்பற்றிக்கொண்டதாகும். அக்காலத்தில் புன்னாடு நீலக்கல் சுரங்கங்களுக்குப் பேர் பெற்றிருந்த செழிப்பான நாடாக