216
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
பல புரி
வார்கயிற் றொழுகை நோன்சுவற் கொளீஇப் பகடுதுறை யேற்றத் துமண்விளி வெரீஇ உழைமான் அம்பிணை யினனிரிந் தோடக் காடுகவின் அழிய உரைஇக் கோடை நின்றுதின விளிந்த அம்பணை நெடுவேய்க் கண்விடத் தெறிக்கு மண்ணா முத்தம் கழங்குறழ் தோன்றல பழங்குழித் தாஅம் இன்களி நறவின் இயல்தேர் நன்னன் விண்பொரு நெடுவரைக் கவாஅன் பொன்படு மருங்கின் மலை (அகம் 173:8-18)
நன்னனுடைய துளு நாட்டிலிருந்த ஒரு கோட்டையின் மேல் பகை மன்னன் ஒருவன் படையெடுத்து வந்து கோட்டையை முற்றுகையிட்டான் கோட்டையிலிருந்த நன்னனுடைய வீரர்கள் எதிர்த்துப் போரடினார்கள். ஆனால், அவர்கள் தோற்றுப்போகும் நிலையில் இருந்தார்கள். அதனையறிந்த நன்னன் உடனே தன் சேனைகளுடன் வந்து முற்றுகையிட்ட மன்னனை ஓட்டிக் கோட்டையைக் காப்பாற்றினான். இந்தச் செய்தியை மோசிகீரனார் என்னும் புலவர் கூறுகிறார்.
வினைதவப் பெயர்ந்த வென்வேல் வேந்தன் முனைகொல் தானையொடு முன்வந்திறுப்பத் தன்வரம் பாகிய மன்னெயில் இருக்கை ஆற்றா மையிற் பிடித்த வேல்வலித் தோற்றம் பிழையாத் தொல்புகழ் பெற்ற விழைதக ஓங்கிய கழைதுஞ்சு மருங்கிற் கானமர் நன்னன் (அகம் 392: 21-27)
(குறிப்பு: படையெடுத்து வந்த மன்னன் சேர, சோழ, பாண்டியர்களில் யார் என்று கூறப்படவில்லை. முற்றுகையிடப் பெற்ற கோட்டையின் பெயருங் கூறப்படவில்லை. இவை கூறப்பட்டிருந்தால் துளுநாட்டுச் சரித்திரத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பெற்றிருப்போம். ஆனால் இதனைக் கூறிய மோசிகீரனார் சரித்திர நிகழ்ச்சியைக் கூறக் கருதியவர் அல்லர். அகப் பொருட்செய்தியொன்றுக்கு உவமை கூறவந்தவர் தற்செயலாக இந்நிகழ்ச்சியைக் கூறியுள்ளார்.)