பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு
223
ஊர்கள் இன்றும் உள்ளன. பைந்தூரு, பெர்டூரு, பார்கூரு, மங்களூரு, பாணெமங்களூரு, பசரூரு, கொல்லூரு, ஸீரூரு, பைலூரு, சங்வத்தூரு, ஜால்சூரு, புத்தூரு, வேணூரு என்னும் ஊர்கள் துளு நாட்டில் இப்போதுள்ள ஊர்கள்.
வெதிரி
வெதிரி என்னும் சொல் மூங்கில் என்னும் பொருளில் தமிழ்ச் சங்க நூல்களில் வழங்கப்பட்டுள்ளது. இச்சொல் தமிழுக்கு மட்டுமல்லாமல் திராவிட இனமொழிகளுக்குப் பொதுச் சொல்லாக இருந்தது. கன்னட மொழியிலும் துளு மொழியிலும் இச்சொல் பயிலப்படுகிறது. மூங்கில் காடாக இருந்த இடங்கள் வெதிரி என்று வழங்கிப் பிறகு பெதிரி என்று திரிந்துள்ளன. துளு நாட்டிலே மூடுபதிரி, படுபத்ரி என்று இரண்டு ஊர்கள் உள்ளன. இவை மூடபத்ரி படுபத்ரி என்றும் மூடபதிரே, படு பதிரே என்றும் வழங்கப்படுகின்றன. மூடுவெதிரி, படுவெதிரி, என்னும் பெயர்களே இவ்வாறு மருவி வழங்கப்படுகின்றன (மூடு, மூடல் - கிழக்கு, வெதிரி - மூங்கில் காடு, படு - மேற்கு, வெதிரி - மூங்கிற்காடு). மூங்கிற் காடாக இருந்து பிறகு ஊராக மாறிய இடம் என்பது இவற்றின் பொருள்.
துளுநாட்டில் சுப்பிரமணியம் என்னும் பெயருள்ள ஒரு மலையுண்டு. அதற்கு அடுத்த ஊருக்கு சுப்பிரமணியம் என்று பெயர் வழங்குகிறது. முருகனை மலைமேல் வைத்து வழிபட்டனர் பழந்தமிழர். குன்றுகளிலும் மலைகளிலும் முருகனை வழிபட்ட தமிழரைப் போன்றே துளுநாட்டினரும் முருகனை மலைமேல் வைத்து வழிபட்டனர். அந்த மலை அக்காலத்தில் முருகன் மலை என்று பெயர் இருந்திருக்கும். இப்போது முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் பெற்றபிறகு, அந்த மலைக்குச் சுப்பிரமணியம் என்றே பெயர் கூறுகின்றனர். அந்த வழியாகப் பாயும் ஆற்றுக்குக் குமாரதாரீ என்று பெயர் கூறுகின்றனர். குமரன் - முருகன். குமாரதாரி என்பது முருகன் ஆறு என்னும் பொருள் உடையது.
இவ்வாறு துளுநாட்டின் இடப்பெயர்கள் பல தமிழ்ச் சொல்லாகவே அமைந்துள்ளன.
இனி, சங்ககாலத்தில் வழங்கிப் பிறகு மறைந்துபோன தமிழ்ச்சொற்கள் இக்காலத்திலும் துளுமொழியில் சிதைந்தும் மருவியும் வழங்குவதைக் காட்டுவோம். விரிவஞ்சி சில சொற்களை மட்டும் ஆராய்வோம்.