உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

226

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


ஆனால், துளு நாட்டில் அந்தப் பழைய பெயர் உள்ள கோவில்கள் இன்றும் இருக்கின்றன. பூதகோட்ய (பூதகோட்டம்), பூதஸ்தானம் (ஸ்தானம் - இடம், ஸ்தலம்) என்னும் பெயருள்ள பூதக் கோவில்கள் இன்றும் துளு நாட்டில் உள்ளன. பூதசதுக்கம் என்றும் தமிழில் கூறப்பட்டவையே பூதகோட்ய என்றும் பூதஸ்தானம் என்றும் வழங்கப்படுகின்றன. ஆனால், இப்பூத வணக்கத்தில் பல வேறுபாடுகளும் மாற்றங்களும் காலப் போக்கில் ஏற்பட்டிருக்கக்கூடும். என்றாலும் பழைய பூதம் என்னும் பெயரைத் துளு நாட்டினர் இன்றும் விடாமல் வழங்கி வருவது கருதத்தக்கது.

இது போன்று பல பழந்தமிழ்ச் சொற்களின் திரிபுகளைத் துளு மொழியில் காணலாம். உப்பாடு, (உப்பில் அடப்பட்டது - ஊறுகாய்), நுடி (பேச்சு), நுடிகட்டு (குறிசொல்லுதல்), நின்னி (எதிரொலி), கோறி (கோழி), பிலிநாயி (புலிநாய் - கழுதைப் புலி), நாகு (பெண் எருமை) கேரி (கேரி - சேரி), சேரிதெரு. உதாரணமாக துளு நாட்டுப் பாரகூரில் மூடுகேரி - கிழக்குச் சேரி- கிழக்குத் தெரு, கோட்டெகேரி - கோட்டைத் தெரு, மணிகார கேரி முதலியன), நீர்நாள் (ஒரு மாதத்தின் பெயர்), கார்தெல் (ஒரு மாதத்தின் பெயர்), பொந்தேல், புயிந்தேல், பேரார்தெ (மாதங்களின் பெயர்கள்) முதலிய சொற்கள் பழைய திராவிட மொழியின் தொன்மையைக் காட்டுகின்றன. விரிவஞ்சி இதனோடு நிறுத்துகிறேன்.

துளு மொழியில் பழைய இலக்கியம் இல்லாதது பற்றி அம்மொழியைப் புறக்கணிப்பது தவறாகும். பழைய திராவிடச் சொற்களை ஆராய்வதற்குத் துளு மொழி பெரிதும் பயன்படுகிறது. முக்கியமாகப் பழைய தமிழ்ச் சொற்களை ஆராய்வதற்குத் துளு மொழி மிகமிகப் பயன்படும் என்பதில் ஐயமில்லை. தமிழ் மொழியை நன்றாகக் கற்ற பேரறிஞர் துளு மொழியையும் பயின்றுஅதிலுள்ள பழைய திராவிடச் சொற்களை ஆராயவேண்டும். துளு மொழியிலுள்ள சொற்கள் சிதைந்தும் திரிந்தும் உருமாறியும் இருக்கும். அவற்றையெல்லாம் செம்மைப்படுத்தி, பழந்தமிழ்ச் சொற்களுடன் ஒப்பிட்டு ஆராய வேண்டுவது தமிழரின் கடமையல்லவா?

***