உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்-3


வேள்விக்குடிச் செப்பேடு வெளியான பிறகுதான் களப்பிரரைப் பற்றின செய்தி தெரியவந்தது. அதன் பிறகு களப்பிரரைப் பற்றிப் பல அறிஞர்கள் எழுதத் தொடங் கினார்கள். ஆனால், களப்பிரரைப் பற்றின முழு வரலாறு இன்றுங் கிடைக்கவில்லை.

களப்பிரர் வேறு, களம்பாளர் (களப்பாழர்) வேறு என்று சில வரலாற்று அறிஞர்கள் கருதினார்கள். சிலர் இருவரும் ஒருவரே என்று கருதினார்கள். திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியும் திரு. மு. இராக வையங்காரும், களப்பிரரும் களம்பாளரும் ஒருவரே என்று கருதினார் கள். திரு. டி. வி. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இருவரும் வெவ் வேறு இனத்தவர் என்று கருதினார். பண்டாரத்தார் இதுபற்றி இவ்வாறு எழுதினார்: “அன்றியும் தமிழ்நாட்டுக் குறுநில மன்னர் குடியினராகிய முத்தரையர் என்போர் களப்பிரரேயாவர் என்று சிலர் கூறுவது சிறிதும் ஏற்புடைத்தன்று. களப்பாள் என்ற சோணாட்டூரொன்றில், முற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரசியல் தலைவன் ஒருவன் களப்பாளன் என்று சிறப்பித்து வழங்கப் பெற்றமையால், அவன் வழியினர் களப்பாளர் எனவும் களப்பாளராயர் எனவும் குடிப்பெயர் பெற்றுப் பெருமையோடு வாழ்ந்து வருவாராயினர். எனவே, தமிழராகிய களப்பாளரும் ஏதிலராகிய களப்பிரரும் ஒருவரே யாவரென்னும் முடிவு எவ்வாற்றானும் ஒத்துக்கொள்ளத் தக்கதன்று” (பாண்டியர் வரலாறு, டி. வி. சதாசிவ பண்டாரத்தார்; 'பாண்டி நாட்டில் களப்பிரர் ஆட்சி’ என்னும் தலைப்புக் காண்க).

தளவாய்புரச் செப்பேடு கிடைப்பதற்கு முன்பு திரு. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இவ்வாறு எழுதினார். அந்தச் செப்பேடு கிடைத்த பிறகு களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்பது தெரிந்து விட்டது. வேள்விக்குடிச் செப்பேடு களப்பிரர் என்று கூறுவதைத் தளவாய்புரச் செப்பேடு களப்பாழர் (களப்பாளர்) என்று கூறுகிறது. “கடிராறு கவனலங்கல் களப்பாழர் குலங்களைந்தும்" என்றும் (வரி 99) “களப்பாழரைக்களை கட்ட மற்றிரண்டோள் மாக்கடுங்கோன் மானம் பேர்த்தருளிய கோன்" என்றும் தளவாய்ப்புரச் செப்பேடு (வரி 131 132) கூறுகிறது. எனவே, களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்பது தெளிவாகத் தெரிகிறது. இனிக் களப்பிரரைப் பற்றித் தொடர்ந்து ஆராய்வோம்.