பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர், துளு நாடு
31
/31
மலையின் பழைய பெயர் களபப்பு பெட்ட (பெட்ட - மலை) என்று கூறப்பட்டது (கர்நாடக இதிஹாஸ தர்ஸன (கன்னட தேசத்தின் வரலாறு), டாக்டர் எம். வி. கிருஷ்னராவ், எம். கேசவபட்ட, 1970, பக். 13, 14).
ஹொஸகோட்ட தாலுகாவில் கிடைத்துள்ள பழைய வீரக்கல் சாசனம் கன்னட மொழியில் பழைய கன்னட எழுத்தில் எழுதப் பட்டிருக்கிறது. இதில் களப்பிர இராச்சியம் கூறப்படுகிறது. இதன் வாசகம் இது: ஸ்வஸ்திஸ்ரீ மதுராளக் களவர திருராஜ்யதல் மள்ளே கவுண்டரும் சாவா காவுண்ரு துயீநாத பல்கனிளலுதுவ காமூண்ட ஸத்த எர்ரதயக் கர்ளனபூழ்திகம் (Epi. Car., Vol. IX, Hoskote, 13, p. 198). இதனால், களபப்பு நாடு களவர இராச்சியம் என்பது மைசூர் தேசத்தில் இப்போது சிரவணபெளகொள என்று கூறப்படுகிற வட்டாரத்தைச் சேர்ந்திருந்தது என்பது தெரிகிறது. களவர் நாடு, களப்பிரர் நாடு என்னும் பெயர்கள் வேறு சாசனங்களிலும் கூறப்படுகின்றன (Epi. Car., Vol. X, Chintamani, 9). திருத்தொண்டர் புராணம் கூறுகிற 'வடுகக் கருநாடர் மன்னன் இந்தக் களபப்பு நாட்டைச் சேர்ந்தவன் என்று கருதலாம்.
கருநாட தேசத்தில் இருந்த களப்பிரரின் களபப்பு இராச்சியம் மைசூர் நாட்டைச் சேர்ந்த கோலார் (கோலாலபுரம்) வரையிலும் பரவி யிருந்தது. கோலாலபுரத்திலுள்ள நந்தி மலை களப்பிரர் மலை என்று கூறப்படுகிறது. (Epi. Car., Vol. X, Chickbalpur, 9). பழைய தமிழ்ச் செய்யுட்கள், தமிழகத்தை யாண்ட களப்பிரரை நந்தி என்றும் நந்தி மலையை யுடையவர் என்றும் கூறுகின்றன: "நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி,' “புகழ்துறை நிறைந்த பெருவேல் நந்தி.”
கன்னட நாட்டுக் களபப்பு இராச்சியத்தை யாண்ட களப்பிரர் எப்பொழுதும் சுதந்தரராக இருக்கவில்லை. அவர்கள் கடம்பர், கங்கர் போன்ற வேறு அரசர்களுக்கு வெவ்வேறு காலத்தில் அடங்கியிருந் தனர் என்பது தெரிகிறது. கடம்ப அரசனான சாகுஸ்தன் (கி. பி. 425- 450) களபோரருக்குப் (களப்பிரர்) பகைவன் என்று பேலூர் தாலுகாவில் ஹல்மிடி என்னும் ஊரிலுள்ள கல்வெட்டு எழுத்துக் கூறுகிறது. (Mysore Archaeological Report, 1936, No. 16). களபப்பு நாட்டின் அரசனான திண்டிகன் என்பவன், மேலைக்கங்க அரசனான ஸ்ரீபுருஷனுடைய அனுமதி பெற்று ஒரு தானத்தைக் கொடுத்தான் என்று ஒரு சாசனம் கூறுகிறது. (Mysore Arch. Rep. 1927, No. 118). இதிலிருந்து களபப்பு அரசர் சில காலம் கங்க அரசருக்குக் கீழடங்கியிருந்தனர் என்பது தெரிகிறது.