38
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
இந்தச் சான்றுகளினாலே களப்பிர அரசர் வைணவர் என்றும் வைணவப் பெயராகிய அச்சுதன் என்னும் சிறப்புப் பெயரைக் கொண் டிருந்தார்கள் என்பதும் தெரிகின்றன.
களப்பிர அரசர் தொண்டை நாட்டைத் தவிர சேர, சோழ, பாண்டிய நாடுகளை வென்று அரசாண்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இவர்கள் சேர, சோழ, பாண்டியரின் கொடிகளைத் தங்களுடைய கொடிகளாகக் கொண்டிருந்தனர் என்பதைக் ‘கெடலருமா முனிவர்' என்று தொடங்கும் செய்யுளினால் அறிகிறோம் (இணைப்பு 1 காண்க). அந்தச் செய்யுளின் இறுதிப் பகுதி இவ்வாறு கூறுகிறது.
அடுதிறல் ஒருவ! நிற் பரவுதும், எங்கோன்
தொடுகழற் கொடும்பூண் பகட்டெழில் மார்பிற் கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன் ஒன்றுகடல் உலகம் முழுவதும்
ஒன்றுபு திகிரி யுருட்டுவோன் எனவே
இதனால், கயல் (மீன்), சிலை (வில்), கொடுவரி (புலி) ஆகிய அடை யாளங்களைக் களப்பிரர் கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது. அதாவது, பாண்டியனுடைய மீன் கொடியையும் சேரனுடைய வில் கொடியையும் சோழனுடைய புலிக் கொடியையும் களப்பிரர் தங்களுடைய கொடியாகக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகிறது. சேர, சோழ, பாண்டியரின் அடையாளங்களைக் கொண்டிருந்தபடியால் இம்மூன்று நாடுகளையும் அவர்கள் கைப்பற்றி அரசாண்டார்கள் என்று ஐயமறத் தெரிகின்றது.
களப்பிரர் எத்தனை பேர் அரசாண்டார்கள் அவர்கள் நாட்டுக்கு என்னென்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. பாண்டி நாட்டில் மதுரையைத் தலைநகரமாக்கிக்கொண்டு களப்பிரர் அரசாண்டதை அறிகிறோம். உறையூர், காவிரிப் பூம்பட்டினங்களிலும் இருந்து சோழ நாட்டைக் களப்பிரர் அரசாண்டனர் என்பதும் தெரிகின்றது. தில்லை யில் (சிதம்பரம்) இருந்தும் அரசாண்டதையறிகிறோம். சோழநாட்டிலே களப்பாள் என்னும் ஊரில் ஒரு களப்பாளன் இருந்ததையறிகிறோம். சேரநாட்டில் எந்த ஊரில் இருந்து களப்பிரர் ஆட்சி செய்தனர் என்பது தெரியவில்லை. களப்பிரர் ஆட்சி, தொண்டைமண்டலத்தைத் தவிர ஏனைய தமிழ்நாடெங்கும் இருந்தது என்பது தெரிகிறது. களப்பிரர்