56
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
கொற்றக்குடை என்பது பொருள். இவன் மகாநாமனின் கொற்றக்குடை ஏந்தும் அலுவலனாக இருந்தான். மகாநாமன் தன்னுடைய சிங்கள மனைவியின் மகளான சங்கா என்பவளை இவனுக்கு மணஞ் செய்வித்தான். மகாநாமன் இறந்த பிறகு அவனுடைய மகனான சொத்திசேனன் அரசனானான். சொத்திசேனன், மகாநாமனுடைய தமிழ மகிஷியின் மகன் என்பதையறிந்தோம். இவன் முடிசூடின அன்றைய தினமே இவனுடைய சிங்களச் சகோதரியினால் கொல்லப்பட்டிறந்ததையும் அறிந்தோம். சொத்திசேனனுக்குப் பிறகு சத்தக்காகசனாகிய இவன் சிங்கள அரசின் சிம்மாசனம் ஏறினான். இவன் ஓராண்டு காலம் அரசாண்டான். இவன் இறந்த பிறகு இவனுடைய உடம்பை அமைச்சன் அரண்மனையிலேயே கொளுத்தி விட்டு, மித்தசேனன் என்பவனை அரசனாக்கினான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 3-4).
மித்தசேனன் (கி. பி. 435-436)
சத்தக்காகசன் இறந்த பிறகு, அமைச்சன் (அவன் பெயர் தெரிய வில்லை) மித்தசேனன் என்பவனைச் சிங்கள நாட்டுச் சிம்மாசனத்தில் அமர்த்தினான். அக்காலத்தில் சிங்கள அரச குலத்தைச் சேர்ந்தவர் ஒருவருமிலர் என்று தோன்றுகிறது. அரசனாக அமர்ந்த மித்தசேனன் யார், இவன் எந்த முறையில் அரசாட்சிக்கு உரியவன் என்பது தெரிய வில்லை. நிச்சயமாக இவன் அரசுக்கு உரியவனல்லன். ஏனென்றால், இந்த மித்தசேனன் பேர்போன அரிசிக் கொள்ளைக்காரனாக இருந்தவன். இவனை அரசனாக்கிய அமைச்சன் இவனை வெளியில் காட்டாமலே மறைத்து வைத்திருந்தான். அரசன் நோயாக இருக்கிறபடியால் அரண் மனையை விட்டு வெளியே வர இயலாமல் இருக்கிறான் என்று அமைச்சன் நாட்டு மக்களிடம் கூறினான்.
எத்தனை நாள் ஒளிந்திருக்க முடியும்? நாட்டு மக்கள் வற்புறுத்தலின்மேல், மித்தசேனன் திருவிழாக் காலத்தில் யானை ஏறி உலா வந்தான். இவன் ஆட்சிக் காலத்தில், ஓராண்டுக்குப் பிறகு தமிழ் நாட்டிலிருந்து பாண்டிய அரச குலத்துப் பாண்டியன் ஒருவன் படை யெடுத்துவந்து மித்தசேனனைப் போரில் கொன்று சிங்கள ஆட்சியைக் கைப் பற்றி யரசாளத் தொடங்கினான் (சூலவம்சம் 38ஆம் பரிச்சேதம் 4 – 11).
இலங்கையில் பாண்டியர் ஆட்சி (கி. பி. 436-463)
தமிழகத்தைச் (சேர, சோழ, பாண்டிய நாடுகளை) களப்பிர அரசர் ஆட்சி செய்தபோது பழைய சேர, சோழ, பாண்டிய அரச பரம்பரையார்