72
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
(தேனூர் மலைக்குகையில்) தவஞ் செய்துகொண்டிருந்தார். கொடும்பாளூர் இருக்குவேள் அரசன் இந்த முனிவரைக் கண்டு வணங்கி இவருக்கு நிலத்தைத் தானஞ்செய்தான் என்று இங்குள்ள சாசனம் கூறுகிறது (புதுக்கோட்டைச் சாசனங்கள் எண் 9.) இந்தக் கல்வெட்டெழுத்து இந்தக் குகைக்கு எதிரில் உள்ள பாறையில் எழுதப்பட்டுள்ளது. அதன் வாசகம் இது:
ஸ்வஸ்தி ஸ்ரீ மலையத் துவஜன் தேனூர் மலையில் தவஞ்செய்யக் கண்டு இருக்குவேள் வந்தித்து அவிப்புறஞ் செய்த பள்ளிச் சந்தத் நாலே கால். இவ்வறங் காத்தான் அடி நித்தஞ் சென்னி. அன.
இந்தக் கல்வெட்டில் தானஞ்செய்த அரசன் பெயர் இருக்குவேள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அரசனின் சொந்தப் பெயர் எழுதப்படவில்லை. ஆனால், இந்த இருக்குவேள் அநுபமன் என்பவன் என்று கருதப்படுகிறான். இவனுடைய சங்ககிருத்து (ஜைன சங்கத்தைச் செய்தவன், ஆதரித்தவன்) என்ற சிறப்புப் பெயர் இதை உறுதி செய்கிறது. இவனுடைய ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில் (இறுதியில்) சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ அரசன் காஞ்சியிலிருந்து படையெடுத்து வந்த களப்பிர அரசனோடு போர்செய்து வென்று சோழ நாட்டைக் கைப் பற்றினான். அப்போது இந்த இருக்குவேள் (முன்பு களப்பிரரைச் சார்ந்திருந்தவன், பிறகு சிம்மவிஷ்ணுக்குக் கீழடங்கிப்) பல்லவரைச் சார்ந்து இருந்தான் என்று தோன்றுகிறான். இவனுடையபின் சந்ததியர் பல்லவ அரசர்களைச் சார்ந்து இருந்தனர்.
இருக்குவேள் அரசரும் இருங்கோவேள் அரசரும் ஒருவரே என்று ஆரோக்கியசாமி தம்முடைய நூலில் கூறுகிறார் (M.Arokiaswamy, The Early History of the Vellar Basin). சங்க காலத்தில் இருந்த இருங்கோவேள் அரசருக்கும் பிற்காலத்தில் இருந்த இருக்குவேள் அரசருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. அவர்கள் வேறு; இவர்கள் வேறு. பெயர்களில் காணப்படுகின்ற ஒற்றுமை பற்றி இருவரையும் ஒருவராக ஊகிப்பது கூடாது.
களப்பிரருக்குக் கீழடங்கியிருந்த வேறு சிற்றரசர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.