78
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
களப்பிரர் ஆட்சியில் சமயங்கள்
தமிழ் நாட்டிலே இருந்த பழமையான மதங்கள் சைவமும் வைணவமும் ஆகும். கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலே சந்திரகுப்த மௌரியன் காலத்திலும் அவனுடைய பேரனான அசோகச் சக்கரவர்த்தி காலத்திலும் ஜைன மதமும் பௌத்த மதமும் தமிழ் நாட்டுக்கு வந்தன. வந்த மதங்கள் பையப்பையத் தமிழகத்தில் பரவிக்கொண்டிருந்தன. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் ஜைனமும் பௌத்தமும் மேன்மேலும் சிறப்புப் பெற்றுப் பெருகி வளர்ந்தன. பொதுவாகக் களப்பிர அரசர்கள் ஜைன, பௌத்த மதங்களுக்குச் சார்பாக இருந்தார்கள். களப்பிர அரசர் அச்சுதப் பரம்பரையினர் என்று கூறப்படுகிறபடியால் அவர்கள் வைணவ சமயத்தார் என்று கருத வேண்டியிருக்கிறது. கூற்றுவ நாயனார் போன்ற ஒன்றிரண்டு களப்பிர அரசர் சைவ சமயத்தவராக இருந்தனர் என்பதும் உண்மையே. ஆனால், பொதுவாகக் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் ஜைன, பௌத்த மதங்கள் சிறப்படைந்திருந்தன. இந்த மதங்கள் சிறப்படைந்ததற்குக் காரணம் இந்த மதங்களின் பிரச்சாரம் என்று தோன்றுகிறது. சைவ சமயம் சிறப்படையாமல் மங்கிக் கிடந்தது. வைதிக மதமும் மங்கியிருந்தது.
களப்பிரரும் பிராமணரும்
களப்பிரர் பிராமணருக்குப் பகைவர் என்று சிலர் எழுதியுள்ளனர், பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி, கொற்கைகிழான் நற்கொற்றன் என்னும் பிராமணனுக்கு முற்காலத்தில் வேள்விக்குடி என்னும் ஊரைத் தானங் கொடுத்ததை அவனுடைய குடும்பத்தார் பரம்பரையாக அனுபவித்து வந்ததைக் களப்பிரர் தங்கள் ஆட்சிக் காலத்தில் அந்த ஊரைப் பிடுங்கிகொண்டனர் என்னும் சாசனச்சான்றை ஆதாரமாகக் காட்டுகின்றனர். வேள்விக்குடிச் செப்பேடு இந்தச் செய்தியைக் கூறுகிறது. " கொல்யானை பலவோட்டிக் கூடா மன்னர் குழாந் தவிர்த்த பல்யானை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்ட்யாதிராசன் நாகமா மலர்ச் சோலை நளிர்சினை மிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கண்ணாளர் சொலப்பட்ட ச்ருதி மார்க்கம் பிழையாத கொற்கை-