88
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
ஆசாரிய திக்நாகர் தர்க்க நூல்களை நன்கு கற்றவர். நியாயப் பிரவேசம், நியாயத்துவாரம் என்னும் இரண்டு தர்க்க நூல்களை இவர் வடமொழியில் எழுதினார். இவர், பௌத்த மதத்தில் விஞ்ஞானவாதப் பிரிவை உண்டாக்கினார் என்பர். வசுபந்து கி.பி. 420 முதல் 500 வரையில் வாழ்ந்திருந்தார் என்று கூறப்படுகிற படியால் அவரிடம் பயின்ற இவரும் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராதல் வேண்டும். இவர், பற்பல நாடுகளுக்குச் சென்று பலரோடு தர்க்கவாதம் செய்து மீண்டும் காஞ்சிபுரத்துக்கு வந்தார் என்பர். காஞ்சிபுரத்துக்கு வருவதற்கு முன்பே ஒருயா நாட்டில் காலமானார் என்று சிலர் கூறுவர். (பௌத்தமும் தமிழும் என்னும் நூலில் 'தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்' என்னும் தலைப்புக் காண்க.)
போதி தருமர்
இவர் காஞ்சிபுரத்தை யரசாண்ட ஓர் அரசனுடைய மகன். இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்து பௌத்தப் பிக்கு ஆனார்; பௌத்த மதத்தில் தியானமார்க்கம் என்னும் பிரிவைச் சேர்ந்தவர். கி.பி. 520 இல் இவர் சீன நாட்டுக் கான்டன் பட்டினம் போய்ச் சேர்ந்தார். கி.பி. 525இல் சீன தேசத்துக்குப் போனார் என்று சிலர் கூறுவர். சீன நாட்டிலும் ஜப்பான் தேசத்திலும் இவர் தம்முடைய பௌத்தக் கொள்கையைப் பரப்பினார். இவர் போதித்த பௌத்தக் கொள்கையைச் சீனர் 'சான்' மதம் என்பர். ஜப்பானியர். ஜென்மதம் என்பர். போதிதருமரைச் சீனர் தமக்குரிய இருபத்தெட்டுச் சமயக் குரவர்களில் ஒருவராகப் போற்றுகிறார்கள். ஜப்பான் தேசத்திலும் சீன தேசத்திலும் இவருடைய நினைவாகக் கோவில்கள் உண்டு (பௌத்தமும் தமிழும்).
காஞ்சி தருமபால ஆசாரியர்
இவர் காஞ்சிபுரத்தில் பிறந்து வாழ்ந்தவர். காஞ்சிபுரத்து அரசனுடைய அமைச்சராக இருந்த ஒருவரின் மகன். பெற்றோர் இவருக்குத் திருமணஞ்செய்யத் தொடங்கினபோது இவர் திருமணத்துக்கு உடன்படாமல் பௌத்த மதத்தைச் சேர்ந்து பௌத்தத் துறவியானார். பல நாடுகளுக்குச் சென்று தம்முடைய கல்வியை வளர்த்துக் கொண்டார். திக்நாகரிடத்திலும் இவர் சமயக் கல்வி பயின்றார். வடநாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்தபோது கௌசாம்பி நகரத்தில் பௌத்தருக்கும் வேறு மதத்தாருக்கும் சமயவாதம் நடந்த போது பௌத்தர் எதிர்வாதம் செய்யமுடியாத நிலையில் இருந்ததைக்