உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


கள்ளும் மதுவும்

ஆதிகாலம் முதல் உலகமெங்கும் மதுவும் கள்ளும் அருந்தப்பட்டன. தமிழகம் உட்பட பாரத நாடு முழுவதும் அக்காலத்திலிருந்து மதுபானம் அருந்தப்படுகின்றது. தமிழ்நாட்டிலே எல்லாத் தரத்து மக்களும் கள்ளையும் மதுவையும் அருந்தினார்கள் என்பதைச் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகின்றோம். முடியுடை மன்னரும் குறுநில அரசரும் புலவர்களும் போர் வீரர்களும் ஆண்களும் பெண்களும் செல்வரும் வறியவரும் எல்லோரும் மது அருந்தினார்கள். பௌத்த, சமண மதத்தாரும் திருவள்ளுவர் போன்ற அறிஞர்களும் கள்ளுண்பதைக் கண்டித்த போதிலும் மக்கள் கள்ளையும் மதுவையும் அருந்தி வந்ததைச் சங்கச் செய்யுட்கள் சான்று கூறுகின்றன. இருக்கு வேதம் கூறுகிற ‘சோமயாக’த்தைத் தமிழ்நாட்டு ஆரிய பிராமணர் தமிழ் நாட்டில் செய்ததாகச் சான்று இல்லை. ஆனால் வேள்வி (யாகம்) செய்து மது மாமிசம் அருந்தியதைச் சங்கச் செய்யுட்கள் கூறுகின்றன. சங்க காலத்தில் தமிழகத்தில் நடக்காத சோம யாகத்தைப் பிராமணர் பிற்காலத்தில் பக்தி இயக்கக் காலத்தில் பெருவாரியாகச் செய்தனர். சோமபானத்தைக் கொண்டு சோமயாகம் செய்து சோமயாஜி என்று பெயர் பெற்ற நூற்றுக்கணக்கான சோமயாஜிப் பிராமணரைப் பாண்டியர் செப்பேடுகளும் பல்லவர் செப்பேடுகளும் கூறுகின்றன. சோம யாஜிப் பார்ப்பனன் ஒருவன் சோம பானத்தைக் குடித்துக் குடித்துத் தம்முடைய மனத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டதாக (மனோ அத்தர் ஆகியதாக!) ஒரு பாண்டிய செப்பேட்டுச் சாசனம் கூறுகின்றது. (தளவாய்ப்புரச் செப்பேடு, வரி, 138) ஆனால் நம்முடைய இப்போதைய ஆய்வு சங்க காலத்தோடு மட்டும் நிற்கிறபடியால் அந்த ஆராய்ச்சிக்குப் போக வேண்டியதில்லை.

சங்க காலத்துத் தமிழகத்திலே கள்ளும் மதுவும் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகவில்லை. உள்நாட்டிலேயே செலவாயின. கள், தேறல், தோப்பி, பிழி, நறவு, மகிழ், மட்டு முதலான பெயர்கள் மது பானங்களுக்குப் பெயராகக் கூறப்பட்டுள்ளன. தென் கட்டேறல் (அகம், 336 : 6) பாப்புக் கடுப்பன்ன தோப்பி (அகம், 348 : 7) பாம்பு வெகுண்டன்ன தேறல் (சிறுபாண் - 237) ‘தண்கமழ் தேறல்’ (புறம், 24), ‘மணங்கமழ் தேறல்’ (மதுரை. 780), ‘பூக்கமழ் தேறல்’ (பொருநர், 157), ‘இன்களி நறவு’ (அகம், 173 : 16), ‘தீந்தண் நறவம், (புறம் 292), ‘மணநாறு தேறல்’ (புறம், 397 : 14), ‘அரவு வெகுண்டன்ன தேறல்’