உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

115



யவன வாணிகர் மரக்கலங்களில் வந்து பொற்காசுகளைக் கொடுத்து மிளகை வாங்கிக் கொண்டு போனதை அக்காலத்தில் நேரில் கண்ட தாயங்கண்ணனாரும் பரணரும் கூறுகிறார்கள்.

‘சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி’ (அகம், 149:8-11)

என்று தாயங்கண்ணனார்கூறுகிறார். சேரர்களுடைய முசிறிப் பட்டினத்துக்கு யவன வாணிகர் வந்ததையும் அவர்களுடைய ‘வினைமாண் நன்கலம்’ அழகாக இருந்ததையும் அவர்கள் பொற்காசுகளைக் கொடுத்து மிளகை வாங்கிக் கொண்டு போனதையும் இவர் கூறுவது காண்க.

சேர நாட்டில் விளைந்த மிளகை வீடுகளில் மூட்டைக் கட்டி வைத்தார்கள். யவனக் கப்பல்கள் வந்த போது மிளகு மூட்டைகளைப் படகுகளில் ஏற்றிக் கொண்டு கழிகளின் வழியே ஆற்றில் சென்று துறைமுகத்தில் தங்கியிருந்த யவனக் கப்பல்களில் ஏற்றுமதி செய்து அதற்கான பொற்காசுகளைப் பெற்றுக் கொண்டு வந்தனர் என்று பரணர் கூறுகிறார்.

‘மனைக்குவைஇய கறிமூடையால் கலிச்சும்மைய கரைகலக் குறுந்து. கலந்தந்த பொற்பரிசம் கழித்தோணியால், கரைசேர்க்குறுந்து’ (புறம்.343)

(மனைக்குவைய - வீடுகளில் குவித்து வைத்த. கறி மூடை - மிளகு மூட்டை. கலம் - (யவனரின்) மரக்கலம். பொற்பரிசம் – பொற்காசு)

யவனக் கப்பல்கள் சேரநாட்டுக்கு வந்து வாணிகம் செய்தபடியால் சேர மன்னருக்குப் பொருள் வருவாய் அதிகமாயிற்று. இதனைக் கண்ட துளு நாட்டு அரசனான நன்னன் இந்த வாணிகத்தைத் தன்நாட்டில் வைத்துக்கொள்ள எண்ணினான். நன்னனுடைய துளு நாட்டில் அக்காலத்தில் முக்கியமான துறைமுகப்பட்டினமாக இருந்தது மங்கலபுரம் என்னும் மங்களூர். இந்தத் துறைமுகம் நேத்திராவதி ஆறு கடலில் கலக்கிற இடத்தில் இருந்தது. பிளைனி என்னும் யவனர் அந்தத் துறைமுகத்தை நைத்ரியாஸ் (Nitrias) என்று கூறியுள்ளார். இவர் கூறுகிற