உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

120

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


இவை கிழக்குக் கடல்களிலிருந்து கொண்டல் (கிழக்குக்) காற்றின் உதவியினால் கப்பல்களில் வந்தவை. இவற்றில் துகில் என்பது பட்டுத் துணி. கிழக்கிலிருந்து வந்த பட்டைத் தமிழ் நாட்டிலிருந்து அரபியரும் யவனரும் வாங்கிக் கொண்டு போய் மேற்கு நாடுகளில் விற்றார்கள்.

தமிழ்நாட்டிலுண்டான பருத்தித் துணிகளுக்குச் சிவப்பு, நீலம், மஞ்சள் முதலான சாயம் ஊட்டினார்கள். ஆனால், வெண்மையான துணிகளையே தமிழர் பெரிதும் விரும்பினார்கள். வெள்ளையாடை சிறப்பாகவும் உயர்வாகவும் மதிக்கப்பட்டது. பிறந்த நாளாகிய வெள்ளணி நாளிலே வெள்ளாடை யுடுத்துவது சிறப்பாக இருந்தது.

சங்க காலத்திலே பருத்தி பயிர் செய்வதும் நூல் நூற்பதும் துணி செய்வதும் ஆடை விற்பதுமாகிய தொழில் சிறப்பாக நடந்தது. துணிகளை விற்ற வணிகருக்கு அறுவை வாணிகர் என்று பெயர் கூறப்பட்டது. மதுரையில் இருந்த இளவேட்டனார் என்னும் புலவர் அறுவை வாணிகம் செய்தார். ஆகையால் அவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்று பெயர் பெற்றார். அவர் இயற்றிய பன்னிரண்டு செய்யுட்கள் சங்க இலக்கியங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. (அகம், 56, 124,230, 254, 272, 302 குறும், 185. நற்றிணை 33, 157, 221, 334, புறம். 329)

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி உணவுக்குச் சுவை அளிப்பது உப்பு. ஆகையால் இது வெண்கல் அமிழ்தம் எனப்பட்டது. ஆதிகாலத்திலிருந்து உப்பு மனிதருக்கு உணவாகப் பயன்படுகின்றது. உணவுக்கு மட்டுமல்லாமல், ஊறு காய், கருவாடு (உப்புக் கண்டம்) முதலானவைக்கும் உப்பு வேண்டப்படுகின்றது. ஆகவே உப்பை எல்லா நாடுகளிலும் உண்டாக்கினார்கள். தமிழகத்திலும் உப்பு செய் பொருளாகவும் வாணிகப் பொருளாகவும் உணவுப் பொருளாகவும் இருந்து வருகின்றது.

நெய்தல் நிலமாகிய கடற்கரை தமிழ்நாட்டைச் சூழ்ந்திருந்த படியால் ஆங்காங்கே உப்பளங்கள் இருந்தன. ஆகையால் தமிழகத்துக்கு எக் காலத்திலும் உப்புப் பஞ்சம் ஏற்பட்ட தேயில்லை. உப்பளங்களில் பாத்திகள் அமைத்துக் கடல் நீரைப் பாய்ச்சி உப்பு விளைவித்தார்கள். பாத்திகளில் பாய்ச்சப்பட்ட கடல் நீர் வெயிலில் ஆவியாகிப் போய் உப்பு பூக்கும். இதுவே கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு (நற் : 345 : 8) ஏர் உழாமல் உவர் நிலத்திலே உப்பு விளைவித்தபடியால்