128
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
சங்க காலத்திலே கடலினடியிலிருந்து சங்கு எடுக்கும் தொழிலும் சங்குகளை வளையல்களாக அறுக்கும் தொழிலும் வளையல் விற்கும் வாணிகமும் மகளிர் வளையல் அணிந்த வழக்கமும் இருந்தன. காதுகளில் சங்குக் குழையணிவது விரல்களில் சங்கு மோதிரம் அணிவதும் கூட அக்காலத்து வழக்கமாக இருந்தது.
முத்து
தமிழ்நாட்டுக் கடலிலே முத்து உண்டாயிற்று. கடலிலே உண்டாகிற முத்துச் சிப்பி என்னும் ஒருவகைக் கிளிஞ்சிலில் முத்து உண்டாயிற்று. முக்கியமாக ஆறுகள் கடலில் கலக்கிற புகர் முகங்களிலேயே முத்துச் சிப்பிகள் அதிகமாக உண்டாயின. பாண்டிநாட்டு முத்து பேர் போனது. 'தென் கடல் பவ்வத்து முத்து' என்று புகழப்படுகின்றது.
முத்து நவரத்தினங்களில் ஒன்றாக மதிக்கப்பட்டது. ஆகவே அது விலை மதிப்புள்ளது. அரசர்கள் ‘ஏகவடம்' என்னும் முத்து மாலைகளை அணிந்தார்கள். ஏகவடம் அரசர்களுக்குரிய அடையாள அணிகளில் ஒன்று. செல்வர் வீட்டுப் பெண்களும் அரச குமாரிகளும் இராணிகளும் முத்து மாலைகளை அணிந்தார்கள். உரோம தேசத்து மகளிர் தமிழ்நாட்டு முத்துக்களைப் பெரிதும் மதித்தனர். தமிழ்நாட்டுக்கு வந்த யவன வாணிகர் இங்கிருந்து வாங்கிக் கொண்டு போன பொருள்களில் முத்தும் ஒரு பொருளாக இருந்தது.
தமிழகத்துக்கு முத்துக்களில் பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றிருந்தது. கொற்கைக் குடாக் கடலில் விளைந்த முத்து சங்கச் செய்யுள்களில் புகழப்படுகின்றது. 'முத்தப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை' (நற். 23-6). 'கொற்கையன் பெருந்துறை முத்து' (அகம், 27:9) சங்க காலத்தில் பாண்டி நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த கொற்கைக் குடாக் கடல் பிற்காலத்தில் மணல் தூர்ந்து மறைந்து போயிற்று. அக்கடல் உள்நாட்டில் ஐந்து மைல் ஊடுருவிக் குடாக் கடலாக அமைந்திருந்தது. அக்காலத்தில் தாமிர பரணியாறு கொற்கைக் குடாக் கடலில் சென்று விழுந்தது. அந்தப் புகர் முகத்திலே முத்துச் சிப்பிகளும், இடம்புரி, வலம்புரிச் சங்குகளும் உண்டாயின. ஆறுகள் கடலில் கலக்கிற புகார் முகங்களிலே முத்துக்களும் சங்குகளும் அதிகமாக உண்டாயின. தாமிரபரணி ஆறு அக்காலத்தில் கொற்கைக் கடலில் விழுந்த புகர் முகத்திலே உண்டான முத்தைத்தான் கவ்டல்லியரின் அர்த்த சாத்திரம் தாம்ரபர்ணிகம் என்று கூறுகின்றது. கொற்கைக் கடல் ஓரத்தில் தாமிர