உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

133


ளாகிய சந்தனக் கட்டை, அகிற்கட்டை, தேன், பலாப்பழங்கள், மிளகு முதலிய பொருள்களையும் யானைத் தந்தங்களையும் அவர்கள் கொண்டுபோய்க் கொடுத்தார்கள் என்று சிலப்பதிகாரம் (25:37) கூறுகின்றது.

யானைத் தந்தங்களினால் பலவகையான பொருள்கள் செய்யப்பட்டன. அயிரைமலைக் கொற்றவைக்குத் தந்தத்தினால் செய்த கட்டில் (ஆசனம்) இருந்தது (பதிற்றுப் பத்து 8 ஆம் பத்து 9).

யானைக் கோட்டை ஈர்வாளினால் அறுத்தும் கடைந்தும் பொருள்களைச் செய்தார்கள். அந்தத் தொழில் மதுரையில் நடைபெற்றதைச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. வேதினத் துப்பவும் கோடு கடை தொழிலவும் (சிலம்பு 14 : 176) என்று கூறுகின்றது. அரும்பதவுரையாசிரியர் இதற்கு வேதினத் துப்பவும் ஈர்வாளால் வலியப் பெற்றனவும் என்றது ஈருங்கருவியாற் பண்ணப்பட்டன. கோடு தந்தம் என்று உரை எழுதுகிறார். சீப்பு, சிமிழ் முதலான பொருள்கள் தந்தத்தினால் செய்யப்பட்டன.

யானைக் கோடுகளை வெளியூர் வாணிகர் வாங்கிக் கொண்டு போனார்கள். யவனர்களும் மற்ற பொருள்களோடு யானைக் கோடுகளையும் வாங்கிக்கொண்டு போனார்கள். சங்க காலத்தில் யானைக்கோடு வாணிகப் பொருள்களில் ஒன்றாக இருந்தது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்னும் பழமொழி யுண்டு. யானை இறந்தால் அதன் தந்தங்களும் எலும்புகளும் அதிக விலைக்கு விற்கப்பட்டபடியால் இறந்தும் ஆயிரம் பொன் என்று கூறப்பட்டது.

யானைத் தந்தங்களும் அக்காலத்தில் முக்கியமான வாணிகப் பொருளாக இருந்தன.

நீலக்கல்

கொங்கு நாட்டிலே சங்க காலத்தில் விலையுயர்ந்த மணிக் கற்கள் கிடைத்தன. சங்கச் செய்யுட்களில் அந்த மணிகள் கூறப்படுகின்றன. கொங்கு நாட்டில் கதிர்மணி கிடைத்ததைக் கபிலர் கூறுகின்றார்.

'இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடு'
(7 ஆம் பத்து, 6 : 19-20)