உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


10. சங்க நூல்களில் தமிழர் வாழ்க்கை

1. தொல்காப்பியம் : ஐயர் யாத்தனர் கரணம்

ஆதிகாலத்தில் ஆணும் பெண்ணும் தாமாகவே ஒருவரை யொருவர் விரும்பி ஒன்று சேர்ந்து வாழ்ந்து குடும்பத்தை நடத்தினார்கள். அக்காலத்தில் திருமணச் சடங்கு செய்யும் முறை இல்.ை வயது வந்த ஆணும் பெண்ணும் தமக்குள்ளே மனம் ஒன்றுபட்டு வாழ்க்கையை நடத்தினார்கள். இந்த வழக்கம் உலகத்திலே எல்லா நாட்டிலும் எல்லா மக்களிடையிலும் நிகழ்ந்த முதல் நிகழ்ச்சி. பிறகு இவ்வித வாழ்க்கையிலே பொய்யும் வழுவும் ஏற்பட்டுச் சமூக வாழ்க்கையில் துன்பங்கள் உண்டாயின. அத்துன்பங்கள் உண்டாகாதபடி சமூகத் தலைவர்கள் அக்காலத்தில் கரணத்தைக் கற்பித்தார்கள். அதாவது மணமகனும் மணமகளும் பலர் அறியத் திருமணஞ் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று திருமணச் சடங்கை அமைத்தார்கள். இது ஆதிகாலத்தில் உலகத்திலே எல்லா நாட்டிலும் ஏற்பட்ட நிகழ்ச்சி. இவ்வாறே தமிழ் நாட்டிலும் ஆதிகாலத்தில் கரணம் (திருமணம்) செய்யும் முறை ஏற்பட்டது. மிகப் பழைய காலத்து இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் இச்செய்தி கூறப்படுகிறது.

தமிழ் நாட்டிலேயும் பழங்காலத்தில் ஆணும் பெண்ணும் தமக்குள் ஒருவரையொருவர் காதலித்துக் கணவன் மனைவியாக இருந்து இல்லற வாழ்க்கை நடத்தினார்கள் என்றும், இவ்வாறு நிகழ்ந்தபோது நெடுங்காலத்துக்குப் பிறகு மக்களில் சிலரிடையே பொய்யும் வழுவும் உண்டாகிச் சமூக வாழ்க்கையில் ஒழுங்கீனமும் துன்பமும் குழப்பமும் ஏற்பட்டன என்றும், அவ்வொழுங்கீனத்தை தடுத்துச் சமூக வாழ்க்கையில் அமைதியையும் ஒழுங்கையும் ஏற்படுத்துவதற்காக ஐயர், கணவன் மனைவியாக வாழவிரும்பும் ஆணும் பெண்ணும் பலர் அறியத் திருமணம் செய்யவேண்டும் என்று கரணத்தை (திருமணச் சடங்கை) அமைத்தார்கள் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப.