பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
141
ஓங்கிய சிறப்பி னுலகமுழு தாண்ட
வாங்குவிற் றடக்கை வானவர் மருமான்
ஐய னாரிதன் அகலிடத் தவர்க்கு
மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க
வெண்பா மாலை யெனப்பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன் பான்மையிற் றெரிந்தே
என்னும் சிறப்புப் பாயிரத்தினால் இதனை அறியலாம்.
ஸ்தாணுரவி என்னும் சேர அரசன் வழங்கிய கோட்டயம் செப்பேட்டுச் சாசனத்திலே, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் “ஐயன் அடிகள்” என்று கூறப்படுகின்றார்.5
ஐயடிகள் காடவர்கோன் என்பவர் சைவ நாயன்மார்களில் ஒருவர். காடவர்கோன் என்பது இவர் பல்லவ அரசர் குலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கிறது. அடிகள் என்பது உயர்வுச் சிறப்பைக் காட்டுகிறது. ஐ என்பது ஐயன் என்பதைக் குறிக்கிறது. ஆகவே, ஐயடிகள் காடவர்கோன், அரசபரம்பரையைச் சேர்ந்தவர் என்பது தெரிகின்றது. இதனால் அரச குலத்தைச்சேர்ந்தவர்களுக்கு ஐயன் என்னும் சிறப்புப் பெயர் வழங்கியது அறியலாம்.
தமிழ்நாட்டுக்கு அருகிலிருக்கும் சிங்களத் தீவாகிய இலங்கைத் தீவிலேயும் பண்டைக் காலத்தில் அரசாண்ட அரச குலத்தவர் அய (ஐயன்) என்றுபெயர் வழங்கப்பட்டனர். இலங்கையில் கலனிப் பகுதியை அரசாண்ட மன்னனின் தம்பி உத்தியன் என்பவன் ஐயன் என்று கூறப்படுகிறான். (மகாவம்சம் XXII.VI 5)6
இலங்கையிலே ராஜகல என்றும் ராஸஹெல என்றும் கூறப்படுகிற இடத்திலே மலைக்குகைகளிலே கி.மு. 2ஆம் நூற்றாண்டிலே பௌத்த பிக்குகள் இருந்தார்கள். அந்தப் பிக்குகளுக்குச் சத்தாதிஸ்ஸன் என்னும் அரசனுடைய பிள்ளைகள் இருவர் தானம் வழங்கினார்கள். அந்தச் செய்தியை அவ்விடத்திலுள்ள சாசன எழுத்து கூறுகிறது. இந்தச் சாசனத்திலே, தானம் அளித்த அரச குமாரர்கள் “மஹா அய” என்றும் “திஸ்ஸ அய” என்றும் கூறப்படுகின்றனர். மஹா அய என்பது (பெரிய ஐயன்) மூத்த அரச குமாரன் என்றும் பொருள் உள்ளது. (இந்த மஹா அய என்பவன் முடி சூடிய பிறகு லாஞ்ச திஸ்ஸன் என்னும் பெயருடன் (கி.மு. 119 முதல் 110 வரையில் அரசாண்டான்). திஸ்ஸ அய