உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4



இதுகாறுங் கூறியவற்றால், இந்திரன் வருணன் வழிபாட்டைக் கூறுகிற தொல்காப்பியம் ஆரிய - திராவிடர் கலாச்சாரக் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல் என்று சிலர் தவறாகக் கூறுவது பொருந்தாது, ஏற்கத்தக்கதன்று என்பது விளக்கப்பட்டது. மேற்பார்வைக்கு மெய்போலத் தோன்றுகிற இப்பொய்க் கூற்றைத் தவறான, உண்மைக்கு மாறுபட்ட பொய்ச் செய்தி என விலக்கித் தள்ளுக.

3. தொல்காப்பியர்காலம்: அர்த்த சாஸ்திரம்

தொல்காப்பியச் செய்யுளியலின் இறுதியிலே முப்பத்திரண்டு தந்திர உத்திகள் கூறப்படுகின்றன. ‘ஒத்தகாட்சி உத்திவகை விரிப்பின்’ எனத் தொடங்கும் நூற்பாவிலே அவ்வுத்திகள் கூறப்படுகின்றன. இந்த முப்பத்திரண்டு உத்திகள், வடமொழியிலே கௌடல்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தின் இறுதியிலும் கூறப்படுகின்றன. சில ஆராய்ச்சிக்காரர்கள் இதைச் சுட்டிக்காட்டி, கௌடல்யரின் அர்த்த சாஸ்திரத்திலிருந்து முப்பத்திரண்டு உத்திகளையும் தொல்காப்பியர் எடுத்துக்கொண்டார் என்று கூறித் தொல்காப்பியம் அர்த்த சாஸ்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டது என்று கூறுகின்றனர்.

வித்தியாரத்தினம் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி, தாம் எழுதிய ‘சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வுரை’ என்னும் ஆங்கில நூலிலே இதைக் கூறுகிறார்: தொல்காப்பியச் செய்யுளியலில் கூறப்படுகிற தந்திர உத்திகள் பல, கௌடல்யருடைய அர்த்த சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளன என்று அவர் எழுதியுள்ளார்.[1]

இந்த உத்திகளை எந்த நூலிலிருந்து எந்த நூல் எடுத்துக்கொண்டது என்பதை இவர் சொல்லவில்லை. ஆனால், இவர் எழுதியதின் முன்பின் தொடர்பை நோக்கும்போது, அர்த்த சாஸ்திரத்திலிருந்து தொல்காப்பியம் எடுத்துக்கொண்டது என்னும் கருத்துத் தொனிக்கும்படி எழுதியுள்ளார்.

திரு. எஸ். வையாபுரிப் பிள்ளையும், தொல்காப்பியம் பிற்காலத்து நூல் என்று தாம் வழக்கம்போல் கூறுகிற ஆதாரமற்ற ஆதாரங்களில் இதையும் ஒன்றாகக் கூறியுள்ளார். “கௌடல்யரின் அர்த்த சாஸ்திரம் தொல்காப்பியத்துக்கு விஷயம் கொடுத்திருக்கிறது. அதாவது, இரண்டு நூல்களின் இறுதியிலும் கூறப்படுகிற முப்பத்திரண்டு உத்திகள், ஆனால், கௌடலியரின் காலம் விவாதத்துக்கு உரியதாகையால் இதைப்பற்றிக் கூறாமல் விட்டுவிடலாம்.” என்று அவர் எழுதுகிறார்.[2]

  1. 1
  2. 2