உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4



5. நடுகல் என்னும் வீரக்கல்

சங்க காலத்துத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் முதலிடம் பெற்றிருந்தவை வீரமும் காதலுமே. அக்காலத்து மக்கள் காதலையும் வீரத்தையும் போற்றினார்கள். ஆகவே, அக்காலத்துப் புலவர்கள், காதல் துறையைக் கூறுகின்ற அகப்பொருட் செய்யுட்களையும் போர்வீரருடைய வீரத்தைக் கூறும் புறப்பொருட் செய்யுட்களையும் அதிகமாகப் பாடினார்கள். சங்ககாலத்திலே முதன்மையான இலக்கியங்கள் இவை இரண்டுமே. பிற்காலத்தில் பக்திப் பாடல்கள் (சமயத் துறைச் செய்யுட்கள்) முதலிடம் பெற்றதுபோல, சங்ககாலத்தில் சமயத்துறைச் செய்யுட்கள் முதலிடம் பெறவில்லை.

வீரத்தைப் போற்றிய சங்ககாலத் தமிழர், போர்க்களத்திலே புறங்கொடாமல் போர் செய்து வெற்றிபெற்ற வீரனைப் போற்றினார்கள். வீரன் போர்க்களத்தில் உயிர் நீத்தால், அவன் வீரத்தைப் போற்றுவதற்காகவும் அவனை நினைவு கூர்வதற்காகவும் நடுகல் என்னும் வீரக்கல் நட்டு வாழ்த்தினார்கள்.

அக்காலத்துத் தமிழர், ஒவ்வொருவகைப் போருக்கும் வெவ்வேறு பெயர் கொடுத்திருந்தனர். பகையரசன் நாட்டிற் சென்று அந்நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டு வருவதற்கு வெட்சிப்போர் என்றும், ஆனிரைகளை மீட்பதற்காகச் செய்யும் போருக்குக் கரந்தைப்போர் என்றும், நாட்டைப் பிடிப்பதற்காகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ ஒரு அரசன் மற்றொரு அரசன்மேல் படையெடுத்துச் சென்று செய்யும் போருக்கு வஞ்சிப்போர் என்றும், படையெடுத்து வந்தவனுடன் எதிர்த்துச் செய்யும் போருக்குத் தும்மைப் போர் என்றும், கோட்டை மதிலை வளைத்துக்கொண்டு முற்றுகையிடும் போருக்கு உழிஞைப் போர் என்றும், கோட்டை மதிலுக்குள்ளிருந்து முற்றுகையிட்டவனுடன் செய்யும் போருக்கு நொச்சிப்போர் என்றும் பெயரிட்டிருந்தார்கள்.

எந்தப் போராக இருந்தாலும், போர்க்களத்தில் நின்று பகைவரை ஓட்டியவனின் வீரத்தைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். அவ்விரல் வீரன் போர்க்களத்தில் போர் செய்து உயிர்விட்டால், அவனது வீரத்தைப் போற்றி அவனை நினைவு கூர்தற்கு அவன் பெயரால் நடுகல் என்னும் வீரக்கல்லை நட்டார்கள். அக்காலத்து மக்களின் பழக்க வழக்கங்களைக் கூறுகிற தொல்காப்பியர், அக்காலத்தில்