பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
161
நடுகல் பீலி குட்டி நார்அரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ
கோடுயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவுங் கொள்ளாதோனே
(புறம். 232:3-6)
நடுகல்லில், இறந்த வீரனுடைய பெயரும் அவன் போரில் இறந்த காரணமும் எழுதப்படுவது வழக்கம், இதை “எழுத்துடை நடுகல்” என்று கூறுகிறார் சீத்தலைச்சாத்தனார். (அகம். 53: 11).
நடுகல்லுக்கு மயிற்பீலி சூட்டித் துடி (பம்பை)யை ஒலித்துப் போர் வீரர்களுக்கு உணவைவிட உகந்ததாகிய மதுபானத்தைப் படைத்து ஆட்டுக் குட்டியைப் பலிகொடுத்து இறந்த வீரனைப் போற்றினார்கள் என்று அம்மூவனார் என்னும் புலவர் கூறுகிறார்.
நுழைநுதி நெடுவேல் குறும்படை மழவர்
முனையாத் துந்து முரம்பின் வீழ்த்த
வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரம்
(அகம். 35: 4-10)
பண்டைக்காலத்து நடுகற்கள் நமக்குக் கிடைக்காமற் போனாலும் பிற்காலத்து நடுகற்கள் சில கிடைத்துள்ளன. எபிகிறாபி என்னும் சாசன எழுத்து இலாகாவும், ஆர்க்கியாலஜி என்னும் பழம்பொருள் ஆராய்ச்சி இலாகாவும் சில நடுகற்களைக் கண்டுபிடித்துள்ளன. நடுகற்களில் எழுத்துக்கள் சுருக்கமாகவே எழுதப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைக் காட்டுவோம்.
இப்போது ஆந்திர தேசத்துடன் இணைந்தபோனதும், தமிழ்நாட்டின் பகுதியாக இருந்ததுமான சித்தூர் மாவட்டத்துப் புங்கனூர் தாலுகா காப்பள்ளெ கிராமத்தில் உள்ள தமிழ் எழுத்துச் சாசனம். கி.பி. 9ஆம் நூற்றாண்டு. வைதம்ப குலத்துப் பள்ளொ (பல்லவ?) அரசனான சாதெ அரசன் ஆட்சியில், கோணக்கி என்பவன் படையுடன் வந்து தொறு (ஆனிரை) கொண்டு போனதையும், அவ்வமயம் முத்துக்கூரு