உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


செய்யவும் துறைமுகப் பட்டினங்களை அமைத்தார்கள். இராக்காலத்தில் கடலில் வருகிற கப்பல்கள் திசை தப்பிப் போகாமலும், துறைமுகத்தைக் காட்டவும் கலங்கரை விளக்குகளை அமைத்தார்கள். துறைமுகங்களில் உள்ள வாணிகப் பொருள்கள் களவு போகாதபடி காவல் வைத்தனர். வாணிகஞ்செய்து பெரும்பொருள் ஈட்டின வணிகப் பெருமக்களுக்கு ‘எட்டி’ என்னும் சிறப்புப் பெயரையும், ‘எட்டிப்பூ’ என்னும் பொற்பதக்கத்தையும் அளித்துச் சிறப்பினைச் செய்தார்கள். தரை வாணிகமும் கடல் வாணிகமும் பெருகவே, அவற்றைச் சார்ந்து பயிர்த்தொழில் வளர்ச்சியும் கைத்தொழில் வளர்ச்சியும் பெருகிப் பொருள்உற்பத்தி அதிகப்பட்டது. பொருள்களின் உற்பத்தியினாலும் வாணிகத்தினாலும் பொருளாதாரம் உயர்ந்து நாடு செழித்து மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தார்கள். நாட்டுமக்களின் நல்வாழ்வுக்கும் நாகரிக வாழ்க்கைக்கும் வாணிகம் முக்கிய காரணமாக இருந்தது.

நாட்டின் சரித்திரம் அந்நாட்டை அரசாண்ட அரசர்களுடைய வரலாறு மட்டும் அன்று. அந்நாட்டில் வாழ்ந்த குடிமக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே சரித்திரமாகும். சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதி வாணிகத்தைச் சார்ந்தது. அக்காலத்து வாணிகத்தைக் கூறுகிற இந்நூல் பழந்தமிழர் வரலாற்றின் ஒரு கூறாகும். தமிழரின் பழைய வரலாற்றை அறிய விரும்புவோர்க்கு இப்புத்தகம் நல்லதோர் துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மயிலாப்பூர் - சென்னை -மயிலை சீனி. வேங்கடசாமி

6-4-1974