உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4



சாத்தனாரும் அந்த இடத்துக்குச் சென்று செங்குட்டுவனைக் கண்டு வருவது வழக்கம். ஓராண்டு செங்குட்டுவன் மலையடி வாரத்துக்குச் சென்று தங்கியிருந்தபோது குன்றக் குறவரும் சீத்தலைச் சாத்தனாரும் செங்குட்டுவனுக்குக் கண்ணகியின் செய்தியைக் கூறினார்கள்.6 இந்தச் செய்தியை யறிந்த செங்குட்டுவன் கண்ணகிக்கு பத்தினிக் கோட்டம் அமைக்க எண்ணினான்.7

பெரியாறு சேரநாட்டில் மேற்கு நோக்கிப் பாய்ந்து, அரபிக் கடலில் விழந்தது. பெரியாறு கடலில் கலந்த இடத்தில் முத்துச்சிப்பிகள் உண்டாயின. முத்துச் சிப்பியிலிருந்து முத்துக்கள் கிடைத்தன. இங்கு உண்டான முத்துக்களைக் கௌர்ணேயம் என்று கௌடல்லியரின் அர்த்த சாத்திரம் கூறுகிறது.8 வடமொழி அர்த்த சாத்திரத்துக்குப் பழைய தமிழ் மலையாள உரை ஒன்று உண்டு. அந்த உரை இந்த முத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறது. அதன் வாசகம் இது. "கௌர்ணேய மாவிது மல (மலை) நாட்டில் முரசி ஆகின்ற பட்டினத்தினரிகே சூர்ண்ணியாற்றிலுள வாமவு." இதில் முரசி என்பது முசிறிப்பட்டினம். இதைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. ஆனால், சேரநாட்டு முத்தைப் பற்றிச் சங்க நூல்களில் காணப்படவில்லை. கௌடல்லியரின் அர்த்த சாத்திரம் இதைக் கூறுகிறது. பெரியாற்றுக்குச் சுள்ளியாறு என்று தமிழில் வேறு பெயர் இருந்ததையறிவோம். சூர்ண்ணி ஆறு என்னும் வடமொழிப் பெயர், சுள்ளி என்னும் சொல்லிலிருந்து உண்டானது போலும்.

சுள்ளி என்னும் பேரியாறு கடலில் கலந்த புகர் முகத்தில் ஆற்றின் வடகரைமேல் கடற்கரைப் பக்கத்தில் முசிறி என்னும் பேர்போன துறை முகப்பட்டினம் இருந்தது. கிரேக்க யவனர் இந்தத் துறைமுகப் பட்டினத்தை முசிரிஸ் என்றும், வடமொழிக்காரர் மரீசிபட்டணம் என்றும் கூறினார்கள்.

வஞ்சிமாநகரம்

இப்போது நமது ஆராய்ச்சிக்குரிய வஞ்சி நகரத்துக்கு வருவோம். வஞ்சி மாநகரம் கரூவூர் என்றும் பெயர் பெற்றிருந்ததை முன்னமே அறிந்தோம். சேர மன்னர்களின் தலைநகரமாக இருந்த இந்த வஞ்சி மாநகரம் முசிறித் துறைமுகத்துக்குக் கிழக்கே பேரியாற்றின் வடகரை மேல் இருந்தது. வஞ்சி நகரத்தின் அமைப்பைப் பெரிதும் மணிமேகலை காவியத்திலிருந்தும் சிலப்பதிகாரக் காவியத்திலிருந்தும் அறிகிறோம்.