உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4



பேரிசைவஞ்சி மூதூர்ப் புறத்துத்
தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
வேளாவிக் கோ மாளிகை
என்று இதைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

37

வேளாவிக்கோ மாளிகை, அரசாங்கத்து விருந்தினர் வந்தால் அவர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டது போலும்.

......கோட்டத்தை வணங்கின பிறகு, அங்கே குணவாயிற் கோட்டத்திலிருந்த சமயவாதிகளின் சமயக் கணக்குகளைக் கேட்ட மணிமேகலை, கிழக்கு வாயிலின்வழியே நகரத்துக்குள் சென்று மேற்கு வாயிலருகிற் சென்றபோது தன்னுடைய பாட்டனைக் கண்டாள். அவனுடைய முன்னோர்களில் ஒருவன் அந்த இடத்தில் பௌத்தச் சயித்தியம் ஒன்றைக் கட்டியிருந்தான். அந்தச் சயித்தியம் வானளாவி உயர்ந்து வெண்சுதை பூசப்பெற்றிருந்தது. அந்தப் புத்த சயித்தியத்தைக் கட்டினவன், கோவலனுக்கு முன்பு (ஒன்பது தலைமுறைக்கு முன்னர்) இருந்தவன். அவனும் கோவலன் என்று பெயர் பெற்றிருந்தான். கோவலனுடைய தந்தையான மாசாத்துவான் பௌத்த பிக்குவாகத் துறவு பூண்டு இந்தச் சயித்தியத்துக்கு வந்திருந்தான். இவனை மணிமேகலை கண்டு வணங்கினபோது இச் செய்திகளையெல்லாம் அவன் அவளுக்குக் கூறினான்.38 பிறகு, மணிமேகலை வஞ்சி மாநகரத்தின் மேற்கு வாயில் பக்கத்திலிருந்து ஆகாயவழியே பறந்து காஞ்சிபுரத்துக்குச் சென்றாள் என்று மணிமேகலை காவியம் கூறுகிறது. இது ஏற்கத்தக்கது அன்று. காவியப் புலவர் ஏன் இப்படி கற்பனை செய்தார் என்பதை இக்கட்டுரையாளர் எழுதிய ‘மணிமேகலையின் விண்வழிச் செலவு' என்னும் கட்டுரையில் காண்க.39

வஞ்சிமா நகரத்தின் மத்தியில் அமைந்திருந்த அரண்மனை வாயிலில் இருந்து, வடக்கே ஒரு பெருஞ்சோலை இருந்தது. அது கோட்டையின் வடக்கு வாயிலைக் கடந்து சென்றது. கோட்டையின் வடக்கு வாயிலுக்கு வெளியே புறநிலைக் கோட்டம் என்னும் கோயில் இருந்தது. செங்குட்டுவன் இமய யாத்திரைக்குப் புறப்பட்டபோது நல்ல முழுத்தத்தில் கொற்றவாளையும் கொற்றக்குடையையும் வடக்கே எடுத்துச் செல்லும்படி கட்டளையிட்டான். அவ்வாறே நல்ல முழுத்தத்தில், கொற்றவாளையும் கொற்றக் குடையையும் கொற்றயானையின் மேல் ஏற்றிக் கொண்டுபோய் புறநிலைக் கோட்டத்தில் வைத்தார்கள்.40