உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

219



மாலுமிகள் தங்கியிருந்தார்கள். சங்க காலத்திலே அரபு வாணிகர்கள் முசிறித் துறைமுகப்பட்டினத்தில் ஒரு பகுதியில் தங்கி வாணிகஞ் செய்தனர். அவர்கள் தங்கியிருந்து வாணிகஞ் செய்த இடம் ‘பந்தர்' என்று பெயர்பெற்றிருந்தது. பந்தர் என்னும் அரபுச் சொல்லின் பொருள், அங்காடி அல்லது கடைத்தெரு என்பது. முசிறி நகரத்து பந்தரில் அரபு வாணிகர் முக்கியமாக முத்துக்களை விற்றார்கள். பந்தருக்கு அருகில் இருந்த கொடுமணம் என்னும் ஊர், பொன் நகைகளுக்கு பேர் பெற்றிருந்தது. முசிறிப் பட்டினத்துப் பந்தர் கொடுமணம் என்னும் ஊர்களில் நகை வாணிகம் சிறப்பாக இருந்தது.

கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை முதூர்க்
கடனறி மரபிற் கைவல் பாண
தெண்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை45
கொடுமணம் பட்ட வினைமாண் நன்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் மூத்தம்46

முசிறித் துறைமுகத்திலிருந்து கிரேக்க யவனர் பல பொருள்களை ஏற்றுமதி செய்துகொண்டு போனார்கள். அப்பொருள்களில் முக்கியமான ஏற்றுமதிப் பொருள் மிளகு. அதிக அளவான மிளகை ஏற்றிக் கொண்டு போவதற்காக யவனக் கப்பல்கள் பெரிதாக இருந்தன. மத்திய தரைக் கடல் நாடுகளில் மிளகு அக்காலத்தில் அதிகமாகச் செலவாயிற்று. யவனர் மிளகை அதிகமாக வாங்கிக் கொண்டுபோனபடியால் மிளகுக்கு 'யவனப் பிரியா' என்று வடமொழியாளர் பெயரிட்டனர்.

யவனக் கப்பல் வாணிகர் முசிறித் துறைமுகத்துக்கு வந்து மிளகை வாங்கிச் சென்றதை சங்கப்புலவர் தங்கள் செய்யுட்களில் கூறியுள்ளனர்.

யவனர் மரக்கலங்களில் முசிறித் துறைமுகத்துக்கு வந்து பொன்னைக் கொடுத்து கறியை (கறி - மிளகு) ஏற்றிக் கொண்டு போனதைப் புலவர் தாயங்கண்ணனார் கூறுகிறார்.

சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி

47