உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


நன்றாகவும் இருந்தன. பால், தயிர், மோர், நெய்களை விற்றார்கள். இவற்றைப் பெரும்பாலும் பண்டமாற்றாகவே விற்றார்கள். முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை, குறிஞ்சி நிலத்து மக்கள் வாழ்க்கையைவிடச் சற்று உயர்ந்திருந்தது. இவர்கள் அவர்களைவிட நன்றாகவும் நாகரிகமாகவும் வாழ்ந்தார்கள்.

மருத நிலத்து மக்கள் வாழ்க்கை

ஏரிகள் அல்லது ஆறுகளைச் சார்ந்திருந்தது மருத நிலம். நில வளமும், நீர்வளமும் உள்ள மருத நிலத்தில் மண்வளம்மிக்க வயல்களில் நெல்லைப் பயிரிட்டார்கள். எருதுகளையும், எருமைகளையும் பூட்டிய ஏர்களினால் நிலத்தை உழுது, பண்படுத்தி எருவிட்டு விதைவிதைத்து நீர்பாய்ச்சி நெல்லை விளைத்தார்கள். கரும்பையும் பயிரிட்டார்கள். காய்கறி முதலான உணவுப் பொருள்களையும் பயிரிட்டார்கள். நெல்லைப் பயிரிட்டு உணவுக்கு முட்டுப்பாடில்லாமல் வாழ்ந்தபடியினால் மருத நிலத்து மக்கள் வாழ்க்கை மற்றநிலத்து மக்கள் வாழ்க்கையைவிடப் பலமடங்கு உயர்ந்திருந்தது. வாழ்க்கையில் அதிகம் கவலைப்படாமல் இருந்த இவர்களுக்கு ஓய்வும் கிடைத்தது. ஆகவே இவர்கள் நாகரிகமும் பண்பாடும் பெற்று வாழ வாய்ப்பிருந்தது.

உலகத்திலே எல்லாத் தேசங்களிலும் மக்கள் நாகரிகம் பெற்றஇடம் ஆற்றங்கரைகளிலும் ஏரிக்கரைகளிலுந்தான் என்று வரலாறு கூறுகிறது. இது உண்மையே. தமிழ்நாட்டிலும் மக்கள் நாகரிகம் பெற்று வளர்ந்த இடம் ஆற்றங்கரைகளும் ஏரிக்கரைகளுமே. ஆகவே மருத நிலத்திலேதான் தமிழருடைய நாகரிகமும் பண்பாடும் வளம்பெற்று வளர்ந்தன. கைத்தொழில்களும் கல்வியும் கலைகளும் வாணிகமும் செல்வமும் அரசியலும் அமைதியான வாழ்க்கையும் மருத நிலங்களிலே செம்மையாகச் செழித்து வளர்ந்தன. மருத நிலத்து மக்கள் கட்டடங்களையும், மாளிகைகளையும், அரண்மனைகளையும் அமைத்துக்கொண்டு நாகரிகமாகவும் நன்றாகவும் வாழ்ந்தார்கள்.

நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை

கடலைச் சார்ந்த நிலம் என்று கூறினோம். கடற்கரைக் குப்பங்களிலும் பாக்கங்களிலும் வசித்த நெய்தல் நிலத்து மக்கள் பரதவர் என்றும் பட்டினவர் என்றும் பெயர் பெற்றனர். மணல் நிலம் ஆகையினால் இங்கே நெல், கேழ்வரகு முதலான தானியங்கள் விளையவில்லை. ஆகவே நெய்தல் நிலத்து மக்கள் கட்டுமரங்களிலும் படகுகளிலும் கடலில்