உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

261


உரோமாபுரியிலிருந்து நாணயங்கள் நமது நாட்டில் குவிந்தன. உரோமா புரியிலிருந்த அறிஞர்கள், தங்கள் நாட்டிலிருந்து வாணிகத்தின் மூலமாகத் தமது நாட்டுப் பொன் அயல் நாடுகளுக்குச் செல்வதைப் பற்றி அக்காலத்தில் முறையிட்டிருக்கிறார்கள். யவனர்கள் வியாபாரத்தின் பொருட்டுக் கொண்டுவந்த உரோம நாட்டு நாணயக் குவியல்கள், சமீப காலத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் இலங்கையிலும் பூமியி லிருந்து தோண்டி எடுக்கப்பட்டன.

தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களிலே யவன வியாபாரிகள் தங்கியிருக்க விடுதிகள் இருந்தன. அன்றியும், யவன வீரர்கள் பாண்டியனுடைய மதுரைக் கோட்டை வாயில்களைக் காவல் காத்தனர் என்னும் செய்தியைச் சிலப்பதிகாரம், நெடுநல்வாடை முதலிய நூல்களி லிருந்து அறிகிறோம். சங்கச் செய்யுளில் காணப்படாத செய்தியொன்று அண்மைக் காலத்தில் தெரியவந்தது. அது, புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு என்னும் இடத்தில் யவனர்களின் பண்டகசாலை இருந்தது என்பதாகும். பிரெஞ்சு நாட்டுத் தொல்பொருள் ஆராய்ச்சி யாளர் ஒருவர் தற்செயலாக அரிக்கமேட்டில் யவனர்களின் பண்டக சாலை இருந்ததைக் கண்டுபிடித்தார். பிறகு தொல்பொருள் துறை அதிகாரிகள் அந்த இடத்தை நன்கு தோண்டிப் பார்த்தனர். அங்கு யவனர்கள் வைத்திருந்த பீங்கான்களும் மட்கலங்களும், பிராமி எழுத்து எழுதப்பட்ட பானை ஓடுகளும் பிறபொருள்களும் காணப் பட்டன. இந்த யவனர்களின் பண்டகசாலை இருந்த செய்தி அறியப்பட்டது.

(Arikamedu : An Indo-Roman Trading station on the east coast of India. P. 17- 24. Ancient India No.2)

அகஸ்தஸ் ஸீஸர் என்னும் உரோமச் சக்கரவர்த்தியின் பேரால், முசிறித் துறைமுகத்தின் அருகில் யவனர்கள் ஒரு கோயிலை அமைத்திருந்தார்கள். அந்தக் கோயிலும் முசிறித் துறைமுகமும், பெரியாற்று வெள்ளப்பெருக்கினால் அழிந்துவிட்டன. யவனர்களின் ஓதிம விளக்குகளும், பாவை விளக்குகளும் தமிழ்நாட்டுச் சீமான்களின் மாளிகைகளில் அக்காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட செய்தியைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து அறிகிறோம்.

ஏறக்குறைய கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் யவனரின் தமிழ்நாட்டு வாணிகத் தொடர்பு நின்றுவிட்டது. கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து