28
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
(நுரை – வெண்ணெய்; அளை - மோர்; மாறும் - பண்டமாற்று செய்யும். கிளையுடன் - சுற்றத்தாரை. அருத்தி - உண்பித்து)
ஆனால், இடைச்சியர் நெய்யைப் பண்டமாற்று செய்யாமல் காசுக்கு விற்று அக்காசுகளைச் சேமித்து வைத்தார்கள். குறிப்பிட்ட தொகை காசு சேர்ந்த போது அக்காசைக் கொடுத்துப் பசுவையும் எருமையையும் விலைக்கு வாங்கினார்கள் என்று இந்தப் புலவரே கூறுகிறார்.
'நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள் எருமை நல்லான் கருநாகு பொறூஉம் மடிவாய்க் கோவலர்'.
—
(பெரும்பாண்; 164-166)
(விலைக்கு அட்டி விலைக்காக அளந்து; பசும்பொன் கொள்ளாள் - நெய் விலையாகவுள்ள காசைப் பெறாமல் அவர்களிடத்திலேயே சேமித்து வைத்து. நல்லான் - பசு. நாகு - பெண் எருமை.)
வேடன் தான் வேட்டையாடிக் கொண்டு வந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லை மாற்றிக் கொண்டதைக் கோவூர்கிழார் கூறுகிறார். இடைச்சியரும் உழவனுக்குத் தயிரைக் கொடுத்து நெல்லைப் பெற்றுக் கொண்டனர் என்று இப்புலவரே கூறுகிறார்.
'கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன் மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கோள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நன்னாடு’
(புறம் 33:1-8)
(வட்டி – பனையோலையால் முடைந்த சிறு கூடை. தசும்பு - பானை. குளக்கீழ் விளைந்த - ஏரிக்கரையின் கீழே விளைந்த. முகந்தனர் கொடுப்ப அளந்து கொடுக்க)
பாணர் உள்நாட்டு நீர் நிலைகளில் (ஆறு, ஏரி, குளங்களில்) வலை வீசியும் தூண்டில் இட்டும் மீன்பிடித்தார்கள். அவர்கள் பிடித்த மீன்களைப் பாண் மகளிர் ஊரில் கொண்டு போய்ப் பயற்றுக்கும் தானியத்துக்கும் மாற்றினார்கள் என்று ஓரம் போகியார் கூறுகிறார்.