உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

33


மகிழ்நொடை பெறாஅர் ஆகி நனைகவுள்

கான யானை வெண்கோடு சுட்டி

மன்றாடு புதல்வன் புன்றலை நீவும்

அருமுனைப் பாக்கம்’

(அகம், 245:8-13)

கொல்லி மலைமேல் வாழ்ந்த சிறுகுடி மக்கள், தம் சுற்றம் பசித்திருப் பதனால், தங்களிடமிருந்த யானைத் தந்தங்களைத் தானியத்துக்கு மாற்றிச் சோறு சமைத்து உண்டனர் என்று கபிலர் கூறுகிறார்.

'காந்தளஞ் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக்

கடுங்கண் வேழத்துக் கோடு கொடுத் துண்ணும்

வல்வில் ஓரி கொல்லிக் குடவரை' (குறுந்தொகை 100:3-5)

(சிலம்பு மலை. வேழத்துக் கோடு யானைத் தந்தம். ஓரி ஓரி என்னும் தலைவன்)

காசு (நாணயம்)

இவற்றிலிருந்து சங்ககாலத்தில் பண்டமாற்று வாணிகம் நடந்ததை அறிகிறோம். ஆனால், பண்டமாற்று வாணிகம் நடந்த அந்தக் காலத்தில் காசு வழங்கப்படவில்லை என்று கருதுவது கூடாது. அதே காலத்தில், செம்பு, வெள்ளி, பொன் காசுகளும் வழங்கி வந்தன. அந்தக் காசுகள் விலை யுயர்ந்த பொருள்களை வாங்குவதற்குக் பயன்படுத்தப்பட்டன். பண்ட மாற்று நடந்ததைச் சங்க நூல்களிலிருந்து தெரிந்துகொள்வது போலவே, காசுகள் வழங்கி வந்ததையும் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம். அந்தக் காசுகள் நெல்லிக் காயின் வடிவம் போல உருண்டு சிறிது தட்டையாக இருந்தன என்று அறிகிறோம். இதனை மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் கூறுகிறார். பாலை நிலத்து வழி யிலே இருந்த நெல்லி மரங்களிலிருந்து உதிர்ந்துள்ள நெல்லிக்காய்கள், பொற்காசுகள், உதிர்ந்து கிடப்பன போலக் காணப்பட்டன என்று அவர் கூறுகிறார்.

'புல்லிலை நெல்லிப் புகரில் பசுங்காய்

கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்பப்

பொலஞ்செய் காசிற் பொற்பத் தாஅம் அத்தம்' (அகம், 363; 6-8)

(புகர் இல் - துளை இல்லாத, கெட்டியான. கடுவளி - பெருங்காற்று. பொலம் செய் காசு - பொன்னாற் செய்த காசு)