உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

45



கடல் வாணிகம்

கடல் வாணிகத்தையும் அக்காலத் தமிழர் வளர்த்தார்கள். மரக்கலங்களாகிய நாவாய்களில் உள்நாட்டுச் சரக்குகளை ஏற்றிக் கொண்டு போய் அயல்நாடுகளில் விற்று, அந்நாடுகளிலிருந்து வேறு பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்தார்கள். தங்கள் நாவாய்களை அவர்கள் கடலில் கரையோரமாகச் செலுத்திக் கொண்டு போய்க் கரையோரமாக இருந்த ஊர்களில் தங்கிப் பொருள்களை இறக்குமதி ஏற்றுமதி செய்தார்கள். ஆனால், தமிழ்நாட்டுக்குக் கிழக்கே வெகுதூரத்தில், ஆயிரம் மைலுக்கப்பால் இருந்த சாவகம் (கிழக்கிந்திய தீவுகள்) காழகம் (பர்மா) கடாரம் முதலான கடல் கடந்த நாடுகளுக்குச் சென்றபோது நடுக்கடலில் நாவாய் ஓட்டிச் சென்றார்கள். தொல்காப்பியர் காலத்துக்கு, கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழர் கடல் வாணிகம் செய்து கொண்டிருந்தார்கள். அக்காலத்துத் தமிழர், கடலில் பிரயாணஞ் செய்யும்போது தங்களுடன் மகளிரை அழைத்துக் கொண்டு போகக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டிருந்தார்கள். தொல்காப்பியர் தம்முடைய இலக்கணத்திலும் அவ்வழக்கத்தைக் கூறியுள்ளார்.

"முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை’

என்று அவர் பொருளதிகாரம், அகத்திணை இயலில் கூறியுள்ளார். (முந்நீர் - கடல். வழக்கம் - வழங்குவது, போவது, மகடூ - மகளிர்) மகளிர் கடலில் பிரயாணம் செய்யக் கூடாது என்னும் கொள்கை நெடுங்காலமாகத் தமிழரிடத்தில் இருந்தது. அண்மைக் காலம் வரையில் இருந்த அந்த வழக்கம் சமீப காலத்தில் தான் மாறிப் போயிற்று. ஆகவே சங்க காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழ் மகளிர் கடலில் கப்பற்பிரயாணம் செய்யவில்லை.

பழங்காலத் தமிழர் வருணன் என்னும் கடல் தெய்வத்தை வழிபட்டார்கள். இதையும் தொல்காப்பியரே கூறுகிறார்.

'வருணன் மேய பெருமணல் உலகம்'

நெய்தல் நிலம் எனச் சொல்லப்படும் என்று அவர் கூறியுள்ளார். (பொருளதிகாரம் அகத்திணையியல்), பழங்காலத்துப் பாண்டியன் ஒருவன் முந்நீர்த் திருவிழாவைக் கடல் தெய்வத்துக்குச் செய்தான். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியனுக்கு முன்பு இருந்த அந்தப் பாண்டியன் நெடியோன் என்று கூறப்படுகிறான்.