உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


கூறினார்கள். இது செழிப்பும் நிலவளமும் நீர் வளமும் உள்ளது. சாவா தீவுக்கு அடுத்து சுமாத்ரா, கலிமந்தன் (போர்னியோ). ஸுலவெஸி, செலிபீஸ், மின்டனாயோ, ஹல்மஹீரா முதலான தீவுகளும் கணக்கற்ற சிறுசிறு தீவுகளும் சேர்ந்ததே தமிழர் கூறிய சாவக நாடு. சாவக நாட்டுக்கு அப்பால் வடக்கே சீன தேசம் இருந்தது. சீன தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடை நடுவிலே கடலில் இருந்த சாவக நாடு (கிழக்கிந்தியத் தீவுகள்) அக்காலத்தில் உலகப் புகழ் பெற்ற வாணிக மத்திய இடமாக இருந்தது. அக்காலத்தில் உலகத்திலே வேறு எங்கும் கிடைக்காத வாசனைச் சரக்குகள் அங்கேதான் கிடைத்தன. ஆகவே சாவகத்தின் வாசனைப் பொருள்களை வாங்குவதற்குச் சீனர் தங்கள் தேசத்துப் பொருள்களை எடுத்துக் கொண்டு கப்பல்களில் அங்கே வந்தார்கள். அக்காலத்தில் சீன தேசத்தில் முக்கியமான பொருள் பட்டு. பட்டுத்துணி அக்காலத்தில் சீன நாட்டில் மட்டும் உண்டாயிற்று. சீனர் பட்டுத் துணிகளையும் பீங்கான் பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு சாவகத்துக்கு வந்தார்கள்.

தமிழ்நாட்டிலிருந்தும் வடஇந்தியாவிலிருந்தும் வாணிகர் கப்பல்களில் சாவகம் சென்றார்கள். சாவக நாட்டில் சாவா தீவின் மேற்குப் பகுதியான சுந்தரத் தீவிலும் அதற்கு அடுத்த சுமாத்ரா தீவிலும் மிளகு உற்பத்தியாயிற்று. ஆனால் இந்த மிளகு, தமிழகத்துக்குச் சேர நாட்டில் உண்டான மிளகு போன்று அவ்வளவு சிறந்ததல்ல. ஆனாலும் சாவகத்து மிளகு தமிழகத்தின் கிழக்குக்கரை நாடுகளுக்குக் கொண்டு வரப்பட்டது. ஏனென்றால், பேர் போன சேர நாட்டு மிளகை, யவனர் கப்பலில் ஏற்றிக் கொண்டு போய் உரோமபுரி முதலான மேல்நாடுகளில் விற்றார்கள். ஆகவே சேர நாட்டு மிளகு போதுமான அளவு தமிழகத்துக்குக் கிடைக்கவில்லை. பற்றாக்குறையை ஈடு செய்யச் சாவக நாட்டுமிளகு தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

சுமத்ரா, ஜாவா தீவுகளிலும், தைமர் (Timor) தீவிலும் சந்தன மரங்கள் விளைந்தன. அந்தச் சந்தனக் கட்டைகள் வெண்ணிறமாகவும், மணமுள்ளவையாகவும் இருந்தன. தமிழ்நாட்டிலே பொதிகை மலை, சைய மலை (மேற்குத் தொடர்ச்சி மலை)களில் சந்தன மரம் விளைந்தது. ஆனால் இந்தச் சந்தன மரத்தைவிட சாவக நாட்டுச் சந்தன மரக் கட்டைகள் மணத்திலும் தரத்திலும் உயர்ந்தவை. அந்தச் சந்தன மரம் மருத்துவத்துக்குப் பயன்பட்ட படியால் சீனர் அதை வாங்கிக் கொண்டு போனார்கள். இலவங்கம் (கிராம்பு) ஒருவகை