உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4



‘தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம்
கற்பூரம் சாதியோ டைந்து.’

என இவை, தமிழ்நாட்டிலிருந்து சாவக நாட்டுக்கு சென்ற கப்பல்கள் முதலில் இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த (இப்போதைய யாழ்ப்பாணம்) மணிபல்லவம் என்னும் சம்புகொல பட்டினத்துக்குச் சென்று தங்கின. இது கப்பல்கள் தங்குவதற்கு நல்ல துறைமுகமாக இருந்தது. ஆனால், இங்கு ஏற்றுமதி இறக்குமதி நடைபெறவில்லை. மணி பல்லவம் (சம்புகொல பட்டினம்) அக்காலத்தில் மனிதர் வாழாத இடமாக இருந்தது; அங்குச் சென்று தங்கின கப்பல்கள் அங்கிருந்து கடற்பிரயாணத்துக்கு வேண்டிய குடிநீரை எடுத்துக் கொண்டு போயின. பிறகு அங்கிருந்து புறப்பட்டு நேரே நெடுந்தூரத்திலுள்ள கிழக்கிந்தியத் தீவுகளான சாவக நாட்டுக்குச் சென்றன. இடைவழியில் நாகர்மலைத் தீவுகள் இருந்தன. நாகர் மலைத் தீவுகள் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 10, 11, 12ஆம் நூற்றாண்டுகளில்) மாநக்கவரம் என்று பெயர் பெற்றிருந்தன. இக்காலத்தில் இத் தீவுகள் நக்கவாரி (நிக்கோபர்) தீவுகள் என்று கூறப்படுகின்றன. அக்காலத்தில் அத்தீவுகளில் நாகர் இனத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள் வசித்திருந்தார்கள். அவர்கள் ஆடை யில்லாமல் மிருகங்களைப் போல வாழ்ந்தபடியால் நக்கசாரணர் என்று கூறப்பட்டனர். நாகர்மலைத் தீவுகளில் கப்பற் பிரயாணிகள் சென்றால், அவர்களை நக்கசாரணர் கொன்று விடுவர். அவர்கள் மனிதரைக் கொன்று தின்றதாகவும் கூறப்படுகின்றனர். ஆகையால் அந்தப் பக்கமாகச் செல்லுகிற கப்பல்கள் அத்தீவுக்குப் போவதில்லை.

சாதுவன் என்னும் வாணிகன் நாகர்மலைத் தீவில் சென்று உயிரிழக்காமல் திரும்பி வந்ததை மணிமேகலை காவியம் கூறுகிறது. சாதுவன் என்னும் வாணிகன் காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்து சாவக நாட்டுக்குப் போய் வாணிகஞ் செய்வதற்காகக் கப்பலில் புறப்பட்டுச் சென்றான். கப்பல் நாகர் மலைத்தீவுக் கருகில் சென்ற போது புயற் காற்றடித்துக் கடலில் மூழ்கிவிட்டது. மாலுமிகள் கடலில் மூழ்கிப் போனார்கள். சாதுவன் மரக்கட்டையொன்றைப் பற்றிக் கொண்டு அருகிலிருந்த நாகர்மலைத் தீவுக்கு நீந்தி நல்லகாலமாகக் கரையை யடைந்தான். ஆனால், இளைப்புங்களைப்பும் அடைந்து சோர்ந்திருந்த அவன் கடற்கரை மணலிலேயே உறங்கிவிட்டான். அயலான் ஒருவன்