பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
79
பெயர் கூறப்படுகிறது. காகந்தி என்றும் இதற்கு ஒரு பழைய பெயர் உண்டு. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் உரோமபுரியிலிருந்து யவன வணிகர் இங்கு வந்து வாணிகம் செய்தார்கள். தூரக் கிழக்கிலிருந்தும் சாவக நாட்டிலிருந்தும் வட இந்தியாவிலிருந்தும் கப்பல் வாணிகர் இங்கு வந்து வாணிகம் செய்தார்கள். சோழ நாட்டுக் கப்பல் வாணிகர் இந்தத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சாவக நாடு, காழகம், கங்கைத் துறைமுகம் முதலான இடங்களுக்குச் சென்று வாணிகம் செய்தார்கள். பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க நூலில் இந்தத் துறைமுகம் கமரா என்று கூறப்படுகிறது. கமரா என்பது காவிரிப்பூம்பட்டினம் என்பதன் சுருக்கமாகும். தாலமி என்னும் கிரேக்க யவனர் இத்துறைமுகத்தைச் சபரிஸ் துறைமுகம் என்று கூறுகின்றார். சபரீஸ் என்பது காவிரி என்பதன் திரிபு.
சோழநாட்டின் முக்கியமான துறைமுகப்பட்டினமாகையால் காவிரிப்பூம்பட்டினத்தில் சோழ இளவரசர்கள் வாழ்ந்திருந்தார்கள். கரிகாற் சோழனுக்குப் பிறகு இருந்த கிள்ளிவளவன் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்தான். இவன் காலத்தில் இப்பட்டினத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காவியங்களின் தலைவர் களான கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகியோர் வாழ்ந்திருந்தார்கள். பேர் போன பௌத்த மதத் தலைவராகிய அறவண அடிகளும் அக்காலத்தில் இப்பட்டினத்தில் இருந்தார்.
காவிரி ஆறு கடலில் கலக்கிற புகர் முகத்தில் அவ்வாற்றின் வடகரைமேல் காவிரிப்பூம்பட்டினம் அமைந்திருந்தது. இப் பட்டினம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்று இரண்டு கூறாகப் பிரிந்திருந்தது. இரண்டு பிரிவுக்கும் இடை நடுவில் நாளங்காடி என்னும் தோட்டம் இருந்தது. கடற்கரையோரமாகக் காவிரி ஆற்றின் கரைமேல் கலங்கரை விளக்கம் அமைந்திருந்தது. கலங்கரை விளக்குக்கு அருகில் கப்பல்கள் வந்து தங்கிய துறைமுகம் இருந்தது. இங்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன. ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களுக்குச் சோழ அரசனுடைய அலுவலர்கள் சுங்கம் வாங்கினார்கள். சுங்கம் வாங்கினதற்கு அடையாளமாக அப்பொருள்களின் மேலே சோழ அரசனுடைய புலி முத்திரையைப் பொறித்தார்கள். இதைப் பட்டினப்பாலை கூறுகிறது.
“நல் இறைவன் பொருள் காக்கும், தொல்லிசைத் தொழில் மாக்கள்........ வைகல் தொறும் அசைவின்றி, உல்கு செயக்குறை படாது........ நீரினின்றும்