96
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
ஆட்சியிலிருந்ததாகத் தெரிகின்றது. பொறையர் சேர அரசர்களின் இளைய வழியினர். கொங்கு நாட்டையரசாண்ட அவர்களுக்கு, உள் நாடாகிய கொங்கு நாட்டில் துறைமுகப்பட்டினம் இல்லாதபடியால், சேர நாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய தொண்டியை வைத்திருந்தனர் என்று தோன்றுகிறது. சேரன் செங்குட்டுவனுடைய தம்பியாகிய (மாற்றாந்தாயின் மகன்) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், வடக்கே தண்டாரணியத்திலிருந்து கொண்டு வந்த வருடைப் பசுக்களைத் தொண்டிக்குக் கொண்டு வந்து தானங் கொடுத்தான்.
'தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுட் டந்து கொடுப்பித்து'(6ஆம் பத்து, பதிகம்)
சங்க காலத்திலிருந்த பொய்கையார் என்னும் புலவர் இந்தத் தொண்டியில் வாழ்ந்தவர் (புறம், 48). தொண்டித் துறைமுகத்தில் அக்காலத்தில் யவன வாணிகர் வந்து வாணிகம் செய்தனர். தாலமி (Ptolemy) என்னும் யவனர் இந்தத் தொண்டியைத் தைண்டிஸ் (Tyndis) என்று கூறியுள்ளார். இங்கு நடந்த வாணிகத்தைப் பற்றி வேறொன்றும் தெரியவில்லை.
மாந்தை
சேர நாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய மாந்தை ‘துறை கெழு மாந்தை', 'கடல்கெழு மாந்தை' என்று கூறப்படுகின்றது. மாந்தை மரந்தை என்றும் கூறப்பட்டது. மாந்தைப் பட்டினத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பொன் வயிரம் மணி முதலான பெருஞ்செல்வத்தை ஆம்பல் கணக்கில் (ஆம்பல் என்பது கணிதத்தில் பெருந் தொகையைக் குறிப்பது) புதைத்து வைத்திருந்தான் என்று மாமூலனார் கூறுகிறார். இந்தப் பெருஞ்சேரலாதன் கடற்கொள்ளைக்கார குறும்பரை அடக்கினவன்.
வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீரோட்டிக் கடம்பறுத் திமயத்து
முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன் செய்பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குறைஇ அன்றவண்
நிலத்தினத் துறந்த நிதியம் (அகம், 127:3-10)
இந்தத் துறைமுகத்தைப் பற்றி வேறொன்றும் தெரியவில்லை.