உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கருங்காலக்குடி பிராமி எழுத்து

மதுரை வட்டத்தின் மேலூருக்கு வடக்கே எட்டுக் கல் தொலை வில் கருங்காலக்குடி இருக்கிறது. இவ்வூருக்கு அருகில் இருக்கிற குன்றுகளில் ஒன்று ‘பஞ்சபாண்டவர் குட்டு' என்று கூறப்படுகிறது. குன்று என்னும் சொல் குட்டு என்று கூறப்படுவது கவனிக்கத்தக்கது. இந்தக் குன்றில், இடைக்காலத்தில் செதுக்கியமைக்கப்பட்ட அருகக் கடவுளின் திருமேனிகளும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும் காணப் படுகின்றன. இவை நம்முடைய ஆராய்ச்சிக்கு உரியவை அல்ல. இந்தக் குன்றின் மேலே இன்னோர் இடத்தில் இயற்கையாக அமைந்த குகையும் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக் கல்வெட்டும் இருக்கின்றன. இவை 1909 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கல்வெட் டெழுத்து 1911 ஆம் ஆண்டின் தொகுதியில் 561ஆம் எண்ணுள்ள தாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் குகையையும் பிராமி எழுத்தையும் பற்றி 1912ஆம் ஆண்டு எபிகிராபி ஆண்டு அறிக்கையில் 57 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அறிக்கையிலேயே இந்தப் பிராமி எழுத்தின் நிழற்படம் வெளியிடப் பட்டிருக்கிறது.

1

இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்து பதினொரு எழுத்துக்களைக் கொண்ட சிறு வாக்கியம். இந்த எழுத்தின் வரிவடிவம் கீழே காட்டப் பட்டுள்ளது. வலப்புறத்தில் இரண்டாவது எழுத்து தெளிவாக இல்லாமல், கல்லில் உள்ள புரைசலோடு சேர்ந்து வட்டவடிவமாகக் காணப் படுகிறது.

திரு. எச். கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார் :

‘(ஏ) ட்டு யர (உ) ர அரி தினா பாளி' (வலப்புறத்து இரண்டாம் எழுத்தை இவர் வடமொழி ட்ட என்னும் எழுத்து என்று கருதுகிறார்) முதல் ஐந்து எழுத்துக்களும் ஓர் ஊரின் பெயரைக் குறிக்கின்றன.