உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அரிக்கமேடு பிராமி எழுத்து

வங்காளக் குடாக் கடலின் ஓரத்தில் புதுச்சேரிக்குத் தெற்கே இரண்டு கல் தூரத்தில் அரிக்கமேடு இருக்கிறது. கி.பி. முதல் நூற்றாண்டில் கிரேக்க யவன வாணிகர் இநத் இடத்தை வாணிக நிலையமாக அமைத்திருந்தனர். உரோம் நாட்டுப் பொருள்களைக் காண்டுவந்து வைக்கவும் இந்நாட்டுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்காகச் சேமித்து வைக்கவும் இந்த இடம் பயன்படுத்தப் பட்டது. இந்த வாணிகத் துறைமுகத்தைப்பற்றிச் சங்கச் செய்யுள் களில் ஒன்றும் கூறப்படவில்லை. கி.பி. முதல் நூற்றாண்டில் வாணி கத் துறையாக இருந்த இடம் பிற்காலத்தில் மறைந்து மண்மூடிப் போயிற்று. 1937இல் இந்த இடத்தில் மணிகளும் இரத்தினக் கற்களும் அவ்வப்போது கிடைத்தன. ஆகவே இந்த இடம் பழம்பொருள் ஆய்வுக்குரிய இடம் என்று கருதப்பட்டு 1941இல் பிரெஞ்சு ஆய்வாளர் சிறு அளவில் அகழ்வாராய்ச்சி செய்தனர். பிறகு 1945இல் இந்திய அரசாங்கத்துப் பழம்பொருள் ஆராய்ச்சியாளர் இந்த இடத்தைப் பெரிய அளவில் ஆழ்ந்து பார்த்தனர். அதன் பலனாக, இந்த இடம் கிரேக்க யவன கப்பல் வாணிக நிலையமாக இருந்தது தெரிந்தது. பல வகையான பொருள்கள் இங்குக் கிடைத்தன. அவற்றில் உரோம் தேசத்து மட்பாண்டங்களும் சீனநாட்டுப் பீங்கான்களும் தமிழ்நாட்டு மட்பாண்டங்களும் கிடைத்தன. இந்தப் பொருள்கள் எல்லாம் முழுமையாகக் கிடைக்காமல் உடையுண்ட துண்டுகளாகக் கிடைத்தன. சில மட்பாண்ட ஓடுகளில் பிராமி எழுத்துக்கள் வரையப்பட்டிருந்தன. உடைந்துபோன ஓடுகளாகக் கிடைத்தபடியால் எழுத்துக்களின் முழுவாசகம் கிடைக்கவில்லை. இரண்டோர் ஓடுகளில் முழுச்சொற்கள் கி டைத்துள்ளன. அந்தச் சொற்கள், மட்பாண்டத்துக்குரியவரின் பெயராகக் காணப்படுகின்றன. நீண்ட வாக்கியமாக இல்லை. இந்த மட்பாண்டங்களை வனைந்து அவை ஈரமாக இருந்தபோதே எழுத்தாணி போன்ற கருவியினால் எழுத்தைக் கீரிப் பிறகு சூளையில் இட்டுக் கொளுத்தப்பட்டவை இவை என்று தெரிகின்றது.