உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பழங்காலத்து எழுதுகருவிகள்*

இந்தக் காலத்திலே உலகம் முழுவதும் காகிதத்தாளும் பேனாவும் எழுதுகருவிகளாகப் பயன்பட்டு வருகின்றன. இவை எழுத்து வேலைக்குப் பெரிதும் வாய்ப்பாகவும், எளிதாகவும் அமைந் திருக்கின்றன. ஆனால் காகிதத்தாள் வருவதற்க முன்பு, பண்டைக் காலத்திலே இவ்வளவு எளிதும், வாய்ப்பும் ஆன எழுது கருவிகள் இல்லை. பண்டைக் காலத்திலே உலக மக்கள் எவ்விதமான எழுதுகருவிகளை வழங்கிவந்தார்கள் என்பது பற்றியும், பின்னர்க் காகிதத்தாள் எவ்வாறு நடைமுறையில் வந்தது என்பதைப் பற்றியும் ஈண்டுக் கூறுவோம். களிமண் சுவடிகள்

சிறிய ஆசியா தேசத்தில் யூப்ரெடிஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கிற இடத்தில் இருந்த கால்டியா, ஸைரியா நாட்டு மக்கள், ஆதி காலத்தில் களிமண்ணை எழுதுகருவியாகக் கொண்டிருந்தார்கள். களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளைப்போல் அமைத்து, அப்பலகையின் ஈரம் உலர்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலரவைத்துப் புத்தகமாக உபயோகித்தார்கள்; அவர்கள் எழுதிய எழுத்துக்களுக்குக் கூனிபார்ம் எழுத்து என்று பெயர் கூறுவர். அவர்கள் எழுதிய களிமண் சுவடிகளைப் புத்தக சாலையில் வைத்துப் போற்றினார்கள். அவ்வாறு போற்றி வைக்கப் பட்டிருந்த களிமண் சுவடிகள் பல சமீப காலத்தில் பூமியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அந்தக் களிமண் சுவடிகள் மேல்நாட்டுக் காட்சிச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

பேபரைஸ் புத்தகம்

பண்டைக் காலத்தில், நாகரிகம் பெற்று வாழ்ந்த மக்கள் எகிப்தியர் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர் கண்ட முடிவு. அக்காலத்து எகிப்தியர்கள் எழுது கருவியாகப் பயன்படுத்திய பொருள் பேபரைஸ் என்பது. பேபரைஸ் என்னும் இச்சொல்தான் இப்போதும் ‘பேபர்’ என்று காகிதத்தாளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், எகிப்தியர் * மயிலைசீனி. வேங்கடசாமி எழுதிய நுண்கலைகள் (1967) எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.